குழந்தைகளிடம் வீடியோ மூலம் பேசி உற்சாக மூட்டி வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி


சினிமா உலகில் நகைச்சுவை நடிகரா இருந்தாலும், ரியல் லைப்ல சூரி ஒரு ரியல் ஹீரோவாக தான் வலம் வருகிறார். பல்வேறு இடங்களிலும் உதவி செய்துவருகிறார். கொரோனா சமயத்தில் நோய் தொற்று தடுப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூரி ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், அவரது மகள் வெண்ணிலா, மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரம் ரொக்கத்தையும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.



 



 

இது போன்று பல்வேறு உதவிகளை செய்து வரும் சூரி விடுதலை திரைப்படத்தின் மூலமாக நடிகராக உருவாகியுள்ளவர். இந்நிலையில், சூரியின் பெயரில் அவரது ரசிகர்கள் நற்பணி இயக்கம் தொடங்கி மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை, ஏழை எளியோருக்கு அன்னதானம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவருகின்றனர். அதன்படி நடிகர் சூரியின்  பிறந்தநாளினை முன்னிட்டு சூரி ரசிகர் மன்றத்தின் சார்பில்  (ஆட்டிசம் பாதித்த)  சிறப்பு குழந்தைகளுக்கான குரல் தேடல் என்ற தலைப்பிலான இசை நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்றது.

 


 




 

இதில் கலந்துகொண்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான சிறப்பு குழந்தைகள் (ஆட்டிசம் பாதித்த) குழந்தைகள் சூரி நடிப்பில் வெளிவந்த விடுதலை திரைப்பட பாடல் உள்ளிட்ட பல்வேறு சினிமா பட பாடல்களை  அசாத்திய திறமையோடு  பாடி அசத்தியது மெய் சிலிர்க்க வைத்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகளிடம் திரைப்பட நடிகர் சூரி வீடியோ காலில்  பேசி வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். 



 

அப்போது பேசிய அவர், சினிமா ஷூட்டிங்கில் இருப்பதால் வர முடியவில்லை என்றும் இந்த சிறப்பு குழந்தைகள்  எல்லாம்  கடவுளின் குழந்தைகள் என்றும் பேசினார். கடவுளின் குழந்தைகளை பார்த்துகொள்ளும் பொறுப்பை பெற்றோர்களுக்கு கடவுள் கொடுத்திருக்கிறார் என்றும் விரைவில் நேரில் சந்திப்பேன் என்றும் தெரிவித்தார்.



 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பாடி அசத்திய குழந்தைகளுக்கு சூரி நற்பணி மன்ற அகில இந்திய தலைவர் ஆதிஸ்வரன் தலைமையில் இசை அரசர், இசை அரசி பட்டங்களுடன் பரிசுக்கோப்பைகளும், சான்றிதழ்களும்  வழங்கி கௌரவித்தனர். இதில் கலந்துகொண்ட சிறப்பு குழந்தைகள் மற்றும் குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களுக்கு மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதுவரை எந்த நடிகரும் செய்யாத அளவற்கு நடிகர் சூரி இதுபோன்று சிறப்பு குழந்தைகளை ஊக்குவிப்பதற்கான முயற்சியை கையில் எடுத்துள்ள மகிழ்ச்சி அளிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.