நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள மகாராஜா இன்று வெளியாகியுள்ள நிலையில் அப்படத்துக்கு நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்துள்ளார். 


பல படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக மாறினார். தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். சூதுகவ்வும், பீட்சா, காதலும் கடந்து போகும், இறைவி, நானும் ரௌடி தான், கருப்பன், மாமனிதன், தர்மதுரை, கடைசி விவசாயி, ஆண்டவன் கட்டளை என மளமளவென இந்த 14 ஆண்டுகளில் விஜய் சேதுபதி பல படங்களில் ஹீரோவாக நடித்து விட்டார். 


இதற்கு நடுவில் ரஜினிகாந்த், விஜய், ஷாரூக்கான் ஆகியோருக்கும் வில்லனாகவும் விஜய் சேதுபதி நடித்தார். பாலிவுட்டிலும் நடப்பாண்டு எண்ட்ரீ கொடுத்தார். இப்படியான நிலையில் விஜய் சேதுபதியின் 50வது படமாக “மகாராஜா” இன்று வெளியாகியுள்ளது. நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ள அனுராக் காஷ்யப், நட்டி, பாய்ஸ் மணிகண்டன், சிங்கம்புலி, முனிஷ்காந்த், அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இப்படம் இன்று வெளியாகியுள்ளது. 






நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர்களுக்கும், நேற்று திரைத்துறையினருக்கும் மகாராஜா படம் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படம் பார்த்த பலரும் விஜய்சேதுபதி, நித்திலன் சுவாமிநாதன் மற்றும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். இதனிடையே நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “மகாராஜா படம் பார்த்து விட்டு வெளியே வருகிறேன். என்ன ஒரு அற்புதமான திரைக்கதை. இந்த காட்சியின் ஸ்டாராக நித்திலன் சாமிநாதன் திகழ்கிறார். இந்த ரத்தினத்தை தமிழ் சினிமாவில் சேர்த்துள்ளார். இது விஜய் சேதுபதிக்கு மிகச் சரியான 50வது படமாகும். அதுமட்டுமல்லாமல் அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், அபிராமி, மம்தா மோகன் என அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள்” என தெரிவித்துள்ளார். 


இதேபோல் நடிகர் சூரி வெளியிட்டுள்ள பதிவில், “இன்று திரையரங்குகளில் வெளியாகும், என் அன்பு மாமா விஜய் சேதுபதி யின் ஐம்பதாவது திரைப்படம் மகாராஜா மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள்‌. இயக்குநர் நித்திலன் சாமிநாதன அவர்களுக்கும், மகாராஜா படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். 




Also Read: Maharaja Movie Review : விஜய் சேதுபதி 50 : குடும்பத்தோட பாக்கலாமா? மகாராஜா விமர்சனம் இதோ ( ஸ்பாய்லர் இல்லாமல்)