ENG Vs Oman T20 WolrdCup: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஓமன் அணிக்கு எதிரான போட்டியில்,  இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


ஐசிசி டி-20 உலகக் கோப்பை:


ஐசிசி ட்-20 உலகக் கோப்பை தொடங்கி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை குரூப் - ஏ, குரூப் - பி, குரூப் - சி மற்றும் குரூப் - டி என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் உள்ள இங்கிலாந்து மற்றும் ஓமன் அணிகள் மோதின.


ஓமனை சுருட்டிய இங்கிலாந்து: 


ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 13.2 ஓவர்களில் 47 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிபட்சமாக எராஸ்மஸ்சோயப் கான் 11 ரன்களை சேர்க்க, மற்ற வீரர்கள் அனைவருமே ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அபாரமாக அடில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் மற்றும் வுட் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். 


இமாலய வெற்றி பெற்ற இங்கிலாந்து:


இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில், அதிரடியாக விளையாடிய கேப்டன் பட்லர் 8 பந்துகளில் 24 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். சால்ட் 12 ரன்களை சேர்த்து அவுட்டானார். இதனால், வெறும் 3.1 ஓவரிலேயே இலக்கை எட்டி, இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இருப்பினும், நமீபியா உடனான கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதோடு, ஆஸ்திரேலியா அணி உடனான போட்டியில் ஸ்காட்லாந்து தோல்வியுற்றால் மட்டுமே, இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியும்.


ஐசிசி டி-20 உலகக் கோப்பையில் புதிய சாதனை: 


வெறும் 3.1 ஓவர்களிலேயே இலக்கு எட்டப்பட்டதால், இங்கிலாந்து நமீபியா இடையேயான போட்டியில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 



  • முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு டி-20 உலகக் கோப்பையில், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி இலக்கை வெறும் 5 ஓவர்களில் எட்டிய சாதனையை தற்போது இங்கிலாந்து முறியடித்துள்ளது.

  • டி-20 போட்டிகளில் 8.2 ஓவர்களில் இலக்கை எட்டியதே இங்கிலாந்து அணியின் முந்தைய சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது

  • இங்கிலாந்து வெற்றி பெற்றபோது 101 பந்துகள் மீதமிருந்த நிலையில், அதிகப்படியான பந்துகளை மீதம் வைத்து டி-20 போட்டியில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது

  • ஓமன் எடுத்த 47 ரன்கள் என்பது டி-20 உலகக் கோப்பையில் எடுக்கப்பட்ட நான்காவது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். டி-20 போட்டியில் அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோரும் இதுவே ஆகும்.

  • மிகக் குறைந்த பந்துகள் வீசப்பட்ட டி-20 போட்டி என்ற பட்டியலில் இங்கிலாந்து - ஓமன் போட்டி (99 பந்துகள்) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இலங்கை - நெதர்லாந்து போட்டி (93 பந்துகள்) முதலிடத்தில் உள்ளது