ப்ளூ சட்டை மாறன் சினிமாக்களை விமர்சனங்களால் வறுத்தெடுப்பார். சில நேரங்களில் சினிமா ரசிகர்களால் வறுத்தெடுக்கப்படுவார். இது ரொம்பவே இயல்பான கதையாகிவிட்டது.


இந்த முறை, அஜித்தின் வலிமை படத்தின் விமர்சனத்தால் வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார். அவருக்கு அஜித் பிரியர் ஒருவர் பகிரங்கமாகவே தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளார்.


அஜித் நடிப்பில் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியான திரைப்படம் 'வலிமை'  ஆகும். இந்த திரைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படம் கடந்த 24-ஆம் தேதி வெளியானது. செயின் பறிப்பு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் பைக் ரேசிங் குழுவை, அஜித் போலீஸ் அதிகாரியாக  தேடிக் கண்டுபிடிப்பதை படத்தின் ஒரு வரி கதையாக எடுத்துக்கொண்டு, ஹெச் வினோத் படத்தை முழுக்க முழுக்க பைக் ரேசிங் காட்சிகளின் பின்னணியில் உருவாக்கியுள்ளார். 


ஹெச்.வினோத், போனி கபூர், அஜித் கூட்டணியில் இரண்டாவது படம். இந்தக் கூட்டணியின் முதல் படம் நேர்கொண்ட பார்வை. வலிமை பட முதல்நாள் வசூல் எல்லாம் பிரம்மாண்டமாக இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு விமர்சனங்களையும் எதிர்கொண்டது.


இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனதில், வலிமை படத்தை மிக மோசமாக ரேட் செய்தார். மேலும், அஜித் முகத்தில் தொப்பை விழுந்திருக்கிறது, டான்ஸ் ஆடுவது மாவு பிசைவது போல இருக்கிறது என்றெல்லாம் ட்விட்டரில் ட்ரோல் செய்து இருந்தார்.


இது அஜித் ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, சின்னத்திரை நடிகர் ராகவேந்திரன் புலி, மிகக் கடுமையான வார்த்தைகளால் ப்ளூ சட்டை மாறனை விமர்சித்துள்ளார்.






"என்னங்க சொன்னீங்க அஜித் சாரை. மூஞ்சில தொப்பை விழுந்திருக்கா? சார் என்னை தப்பா எடுத்துக்காதீங்க, நீங்க என கண்ல பட்டா, உங்க மூஞ்சிக்கு நான் கேரண்டி இல்லை. ஷார்ட் டெம்பர் என்றால் என்ன என்பதை பார்ப்பீங்க." "இப்படிக்கு தளபதி விஜய் சார் ரசிகன், அஜித் சார் admirer, என் கண்ணுல பட்ட.." என ராகவேந்திரன் புலி எச்சரித்து இருக்கிறார்.
அவரது இந்த பதிவு கொண்ட இஸ்டா போஸ்ட் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் இதனை பரப்பி வருகின்றனர்.