கல்வியில் சாதி பார்க்காதீர்கள் என நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ள கருத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 


சென்னையில் இன்று (ஜூலை 16) சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44ம் ஆண்டு நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தேர்வு செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேருக்கு தலா ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகுமார், தன்னுடைய பள்ளிக் கால வாழ்க்கையை பேசிய போது கண்கலங்கினார். 


அவர் தனது உரையில், “எங்கே ஆரம்பிக்க வேண்டும் என தெரியவில்லை. இங்கே இருக்கிற எல்லா பிள்ளைகளின் கதையை கேட்கும்போது பதைபதைக்கிறது. உங்கள் அளவு இல்லையென்றாலும் என்னுடைய வாழ்க்கையும் கிட்டதட்ட சோகமான வாழ்க்கை தான். என்னை சூர்யா, கார்த்தியின் அப்பாவாக தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்னால் இருந்த வாழ்க்கை பற்றி சொல்கிறேன். எங்க அப்பா எப்படி இருப்பாங்கன்னு தெரியாது. நான் 10 மாசமா இருக்கும்போது அவர் இறந்துட்டார். எங்க ஊர்ல பள்ளிக்கூடமோ, படிச்சவங்களோ இல்லை. குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய என் 16 வயது அண்ணன், நான் 4 வயதாக இருக்கும்போது இறந்து விட்டார். 


எங்க ஊர்ல மழை இல்லை, விளைச்சல் இல்லை. கணவன், பிள்ளை இருவரும் போய் விட்ட நிலையில், என்னுடைய அம்மா நினைத்திருந்தால் அரளி விதையை சாப்பிட்டு கதையை 1940களிலேயே முடிந்திருக்கும். ஆனால் அப்படி செய்யவில்லை (இதை பேசும்போது சிவகுமார் கண் கலங்கினார்). பள்ளிக்கூடம் கிடையாது. தெருவில் இருந்து மண் அள்ளி வந்து சதுரமாக பரப்பி தான் அ, ஆ எழுதி பழகினேன். பிரைவேட் பள்ளிக்கூடமும் இருந்தது. காசு கட்டிப் படிக்க முடியாத நிலையில் அக்கா படிப்பை 3வது நிறுத்திக் கொண்டார். நான் தான் படிச்சேன். 


தீபாவளி, பொங்கல் கொண்டாடியதில்லை. அரிசி சாதம் சாப்பிட்டதில்லை. ஒருநாள் தாங்க முடியாமல், பொங்கல்சோறு ஏன் போடவில்லை? என கேட்டேன். அவர் வாழ்நாளில் என் முன் அழுததில்லை. அப்படி நான் படிப்புக்காக என் வாழ்க்கையில செலவு பண்ண தொகை ரூ.750. ஆனால் இன்றைக்கு கார்த்தி குழந்தைக்கு ப்ரீ.கே.ஜி.,க்கு இரண்டரை லட்சம் கேட்கிறார்கள் என்றால் கல்வி எங்கிருக்கிறது என பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது எங்களுக்கு அர்ச்சகர் சாதியைச் சேர்ந்தவர்கள் தான் ஆசிரியர்களாக இருந்தார்கள். அதனால் சாதி பார்க்காதீர்கள்" என தெரிவித்துள்ளார்.