நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்றைய தினம் கிரிக்கெட் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளை என்ற அடையாளத்தோடு வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார். அவரின் முதல் தீபாவளி ரிலீஸாக ‘ப்ரின்ஸ்’ படம் நேற்று முன்தினம் வெளியானது. தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப்  இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில்  நடிகை மரியா, நடிகர் சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். 






தமன் இசையமைத்துள்ள பிரின்ஸ் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் உள்ளிட்டவை பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. ஆனாலும் பேமிலி ஆடியன்ஸ், குழந்தைகளை ப்ரின்ஸ் படம் நிச்சயம் கவரும் என சொல்லப்படுகிறது.மேலும் சிவா இப்படம் தொடர்பாக சின்னத்திரையில் பல ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் தீபாவளி ப்ரின்ஸ் மூலம் வெள்ளித்திரையில் விருந்தளித்த சிவகார்த்திகேயன், இன்றைய தினம் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். 






ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நண்பகல் 12.30 மணிக்கு மோதுகின்றது. இதன் தொடக்கத்தில் நடக்கும் கமெண்டரி நிகழ்வில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் வாயிலாக சிவகார்த்திகேயன் பங்கெடுக்கவுள்ளார்.இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. உலகமே இப்போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் சிவா பங்கேற்பது அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பகல் 12.30 மணிக்கு இது ஒளிபரப்பாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.