இந்திய திரையுலகின் அடையாளங்களில் ஒருவராக கருதப்படுபவர் சிவாஜி கணேசன். தமிழ் திரையுலகின் பெருமையை உலக அரங்கில் கொண்டு சென்ற கலைஞர்களில் முதன்மையானவர் சிவாஜி கணேசன். இவரது 97வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.


ரசிகரை இடித்து தள்ளிய ராம்குமார்:


தமிழ் திரையுலகிற்கு இவர் ஆற்றிய சேவையை பாராட்டி இவருக்கு தமிழக அரசு சென்னை, அடையாறில் மணிமண்டபம் அமைத்துள்ளது. இன்று அவருடைய 97வது பிறந்தநாள் என்பதால் அவரது மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்களும், கலைஞர்களும், பிரபலங்களும் மரியாதை செலுத்தினர்.


மறைந்த நடிகர் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியின்போது நடிகர் பிரபு, நடிகர் வெற்றி நடிக்கும் ராஜபுத்திரன் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பும் வெளியானது. அப்போது பட அறிவிப்பு குறித்து நடிகர் பிரபு பேசிக் கொண்டிருந்தபோது அருகில் பிரபுவின் மூத்த சகோதரரும், சிவாஜியின் மூத்த மகனுமாகிய ராம்குமார் நின்று கொண்டிருந்தார்.


பொதுமக்கள் அதிர்ச்சி:


அப்போது, பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவர் ராம்குமார் அருகில் வந்து நிற்க முயற்சித்தார். இதனால், ராம்குமார் ஆவேசம் அடைந்தார். ஆவேசம் அடைந்த ராம்குமார் அவரை தனது கை முட்டியால் ஆத்திரத்துடன் இடித்து பின்னோக்கி தள்ளினார். சினிமா பாணியில் அவர் அவரை தாக்கியதில் அவர் பின்னால் சென்றுவிட்டார். அப்போது, ராம்குமார் அருகில் இருந்த அவரது மகன் துஷ்யந்த் அவரை சமாதானப்படுத்தினார்.


மேலும், நிகழ்ச்சி முடிந்தது அனைவரும் கீழே இறங்கும்போது ராம்குமார் தனக்கு முன்னால் இருந்தவர்களை வழியை விடுமாறு ஆவேசத்துடன் தள்ளினார். ராம்குமாரின் இந்த செயல் அருகில் இருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராம்குமாரின் இந்த செயலை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நடிகர், தயாரிப்பாளர்:


சிவாஜி ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரபுவுடன் இணைந்து ராம்குமார் ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். ரஜினிகாந்தின் மன்னன், சந்திரமுகி, கமல்ஹாசனின் கலைஞன், அஜித்தின் அசல் ஆகிய பல படங்களை இவர்கள் தயாரித்துள்ளனர்.


தயாரிப்பாளராக மட்டுமின்றி ராம்குமார் அறுவடை நாள் என்ற படம் மூலமாக 1986ம் ஆண்டு அறிமுகமானார். அதன்பின்பு, மை டியர் மார்த்தாண்டம் படம், சந்திரமுகி படத்தில் சிறு சிறு வேடத்தில் நடித்தவர் ஐ படத்தில் முக்கிய வில்லன்களில் ஒருவராக நடித்தார். பின்னர், எல்.கே.ஜி., பூமராங், கறி, மாடர்ன் லவ் சென்னை ஆகியவற்றில் நடித்துள்ளார்.


இந்த நிகழ்வுக்கு முன்னதாக மு.க.ஸ்டாலின் சிவாஜி மணிமண்டபத்திற்கு நேரில் சென்று தனது மரியாதையை செலுத்தினார். 1928ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்த சிவாஜிக்கு ராம்குமார், பிரபு என்ற இரு மகன்களும், தேன்மொழி மற்றும் சாந்தி என்ற இரு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.