இந்தியா வங்கதேசம் அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் கான்பூரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்திய அணி முதல் இன்னிங்சில் அதிரடியாக ஆடி 285 ரன்களை குவித்தது.


95 ரன்கள் டார்கெட்:


இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை நேற்று தொடங்கிய வங்கதேச அணி நேற்று மாலை 2 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து, இன்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணி நிதானமாக ஆட முயற்சித்தனர். ஆனால், பும்ரா, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால் அவர்களால் சமாளிக்க முடியவில்லை. இதனால், வங்கதேச அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  


வங்கதேச அணிக்காக தொடக்க வீரர் ஷத்மான் 50 ரன்களை எடுத்தார். அனுபவ வீரர் முஷ்பிகிர் ரஹீம் தனி ஆளாக போராடி கடைசி விக்கெட்டாக வெளியேறினார். அவர் 63 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 37 ரன்கள் எடுத்தார். இதனால், இந்திய அணிக்கு 95 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆட முயற்சித்தார். ஆனால், அவர் 7 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 8 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த சுப்மன்கில் 6 ரன்களில் அவுட்டானார்.


ஒயிட்வாஷ் செய்த இந்தியா:


34 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகுளை இந்தியா இழந்தாலும் ஜெய்ஸ்வால் – விராட் கோலி ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. ந்திய அணிக்காக தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடி அரைசதம் விளாசினார்.வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜெஸ்வால் ஆட்டமிழந்தார். அவர் 45 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 


விராட் கோலி 29 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 4 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால், இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது. இதன்மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வலுவான நிலையில் முதலிடத்தில் உள்ளது.


பாகிஸ்தான் அணியை அதன் சொந்த நாட்டிலே வீழ்த்தி அதிர்ச்சி அளித்த வங்கதேசம் அணி இந்திய மண்ணில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்த்த வங்கதேச ரசிகர்களுக்கு ஏமாற்றமே அமைந்தது. இந்த போட்டியில் இரண்டு நாட்கள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த ஆட்டமே இரண்டரை நாட்கள் மட்டுமே நடைபெற்றது. இந்த இரண்டரை நாட்கள் ஆட்டத்திலே இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்று தொடரை முழுமையாக வென்று அசத்தியது.