சூர்யாவை பற்றி பேசும் போது இயக்குநரும் நடிகருமான சிங்கம் புலி அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 


விருமன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா, “ என்னோட கேரியர்ல இயக்குநர்கள் பாலா, அமீர் எந்தளவு முக்கியமோ அதே போல் தான் சிங்கம்புலி அண்ணனும் முக்கியம். பிதாமகன்ல பாதி சக்தி, சிங்கம் புலி  சொல்லிக்கொடுத்ததுதான். பேரழகன்லையும் சின்னாவா நடிக்க முடிஞ்சதுக்கு காரணம் அவர்தான். அவரபார்த்துதான் நான் கத்துக்கிட்டேன்.”என்று சொல்ல சிங்கம் புலி அழுது கொண்டே எழுந்து நன்றி கூறினார். 


 


                                       


முன்னதாக சிங்கம்புலி பேசும் போது, “ 2டி நிறுவனத்துல படம் செய்றது என்னோட பேமிலில இருக்குறது மாதிரி இருக்கு. 2000 த்துல அஜித் சார் வைச்சு ரெட் படம் பண்ணேன். அதன் பிறகுதான் சூர்யா சாரை எனக்கு தெரியும். ஆனா என்னோட கல்யாண ரிசப்ஷனுக்கு முதல் ஆளா வந்து லாஸ்ட் ஆளா போனார்.


இதே தேனில பிதாமகன் ஷூட்டிங் நடந்தது.114 நாளு சூர்யா சாருக்கூடையே நான் இருந்தேன். அந்தப்படம் எல்லா மேடையிலையும் என் பேர கொண்டு போய் சேர்த்துச்சு. பேரழகன் படத்த என்ன இயக்க வைச்சு, என்னைய இந்த மேடையில கொண்டு வந்து நிப்பாட்டி இருக்காரு சூர்யா சார். சூர்யா சார் ரொம்ப இரக்கப்படுவாரு. இப்ப அழகுபாக்குறாரு. ஏழை பிள்ளைகள் பலபேர படிக்க வைச்சு அழகுபாக்குறாரு. சூர்யா பேமிலியின் கருணைக்கு முன்னால் எதுமே பெருசில்லை” சொல்லும் போதே கண்கலங்கினார். 


நேற்று (03-08-2022) கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘விருமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, அதிதி சங்கர், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் பங்கேற்றனர். கோலாகலமாக நடந்த இந்த நிகழ்வை முடித்த நடிகர் கார்த்தி இன்று காலை  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். 


தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்குபவர் இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் சாதிய சாயல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான தேவராட்டம் படம் , கடுமையாக விமர்சிக்கப்பட்டது.


படமும் தோல்வியை தழுவியது. அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை இயக்கினார். அதுவும் எதிர்பாத்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு கிராமத்து கதையை முத்தையா கையில் எடுத்த படம்தான் ‘விருமன்






இந்த படத்தில் கார்த்தி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரின்  இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சொந்தமான ‘2டி எண்டர்டைன்மெண்ட்’ தயாரிக்க, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா களமிறங்கியுள்ளார். 


முன்னதாக, 'விருமன்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. . தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற இந்த திரைப்படம் விரைவாக எடுத்து முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.