இளையராஜா மற்றும் வைரமுத்து இடையே வெடித்துள்ள பிரச்சினை தீர்க்கப்பட வேண்டிய ஒன்று என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 


பாடலுக்கு முக்கியம் இசையா? வரியா? 


தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து இடையே வெடித்துள்ள கருத்துமோதல் பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தான் இசையமைத்த பாடல்களை ஒப்பந்தம் காலாவதியான பிறகும் இரு நிறுவனங்கள் பயன்படுத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இளையராஜா. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாடலுக்கு இசையமைத்த நீங்கள் சொந்தம் கொண்டாடுவது போல, பாடல் வரிகளை எழுதியவரும் கேட்டால் நிலைமை என்னவாகும்?” என்ற கேள்வியை எழுப்பினர். 


இதனைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்து நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக பாடலுக்கு இசை பெரிதா, வரிகள் பெரிதா என்பது பற்றி பேசினார். இதற்கு பதிலடி கொடுத்த இளையராஜா சகோதரர் கங்கை அமரன், வைரமுத்து இத்தோடு அனைத்தையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் தொடர்ந்து வைரமுத்து பாடல்களுக்கு இசை மட்டுமல்ல வரிகளும் முக்கியம் என்ற ரீதியில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். 


சீமான் கொடுத்த பதில் 


இதனிடையே ஆதம்பாவா இயக்கத்தில் இயக்குநர் அமீர் “உயிர் தமிழுக்கு” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் பங்கேற்று படம் பார்த்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 


அப்போது அவரிடம் பாடல்களுக்கு முக்கியம் வரிகளா? இசையா?.. இரண்டு ஆளுமைகள் இடையே பிரச்சினை நடந்து வருகிறதே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “கல்வியா செல்வமா வீரமா என சரஸ்வதி சபதம் படம் தான் எடுக்க வேண்டும். பாடலா இசையா என கேட்டால் இரண்டுமே முக்கியம் தான். இசை இல்லாத வரிகளையும், வரிகள் இல்லாத இசையையும் ரசித்திருக்கிறோம். ஏன் இதை பிரிக்க வேண்டும். 


2 தகப்பன்கள் இடையேயான மோதலில் ஏன் பிள்ளைகளை இழுத்து விடுகிறீர்கள்?. இது தீர்க்கப்பட்ட வேண்டிய பிரச்சினையாகும். இளையராஜா கேட்பது போல படைப்பாளிக்கான அங்கீகாரம் வேண்டும். அதை புரிந்து கொள்ள வேண்டிய இடத்தில் நாம் தவறாக புரிந்து கொள்கிறோம். அப்பா இளையராஜா கவிஞர்களுக்கு பாடல்களில் உரிமை இல்லை என சொல்லவில்லை. எனக்கு அதில் உரிமை இருக்கிறது. வேண்டியதை கொடுங்கள் என்று தான் கேட்கிறார். முன்பெல்லாம் படமோ, பாடல்களோ ஒளிபரப்பு செய்யப்படும்போது அதில் குறிப்பிட்ட விழுக்காடு தொகை ராயல்டியாக வழங்கப்பட்டது. இப்போது அது இல்லை” என சீமான் தெரிவித்துள்ளார்.