தமிழ்நாட்டில் உள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் குழந்தை திருமணம் அதிகம் நடக்கும் மாவட்டங்களாக உள்ளது. குறிப்பாக, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு முடித்த குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உடனடியாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்கின்றனர். இதனை தடுப்பதற்காக அரசு சார்பில் கிராமங்கள் தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். இருப்பினும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தை திருமணம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. 


குழந்தை திருமணம்:


இந்த நிலையில், குழந்தை திருமணங்களை தடுத்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், குழந்தை திருமண சட்டம் 2006 இன் படி 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் செய்யும் திருமணம் குழந்தை திருமணமாகும். குழந்தை திருமணம் செய்யப்படுவதால் குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வு, உடல் நலம், கல்வி ஆகியவை கிடைக்காமல் குழந்தைகளின் முன்னேற்றம் தடைப்பட பெரிதும் வாய்ப்பாக அமைகிறது. குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அவர்களின் பாதுகாப்பான சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் குழந்தை திருமண தடுப்பு அலுவலர்களாக மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், காவல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்கள், விரிவாக்க மற்றும் ஊர் நல அலுவலர்கள் ஆகியோரைக் கொண்ட குழு செயல்பட்டு வருகின்றது. மேலும், தற்பொழுது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிபுரியும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தங்கள் பகுதிகளில் குழந்தை திருமணம் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.



சிறை தண்டனை:


குறிப்பாக, குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் திருமணம் நடத்த தொடர்புடையவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 இலட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி எச்சரித்துள்ளார். குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை பள்ளி, கல்லூரி, கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்திற்கு மிக முக்கியமான காரணமாக பள்ளி இடைநிற்றல் ஒரு காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவியர்களின் பள்ளி இடைநிற்றல் விவரங்களை மாவட்ட சமூக நல அலுவலரிடம் வழங்கி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி பள்ளி படிப்பைத் தொடரச் செய்வதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


புகார் எண்:


குழந்தை திருமணம் தொடர்பான தகவல்களை 1098, 151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். மேலும், சேலம் மாவட்ட சமூக நல அலுவலரை 0427 2413213, 9150057631 எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பகுதிகளில் நடைபெறும் குழந்தை திருமணம் தொடர்பான தகவல்களை தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.