நடிகர் கார்த்தி:
அவ்வப்போது இயற்க்கை சீற்றத்தால் மக்கள் சில எதிர்பாராத துயரங்களை சந்திக்க நேர்கிறது. இது போன்ற நேரங்களில் அரசுடன் கைகோர்த்து, முதல்வரின் பொது நிவாரணத்திற்கு பிரபலங்கள் பலர் தங்களால் முடித்த உதவியை செய்ய முன் வருகிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிவாரண நிதிக்காக துணை முதல்வரிடம் வழங்கிய நிலையில், இவரை தொடர்ந்து நடிகர் கார்த்தியும் நிவாரணத்திற்கு நிதி உதவி அளித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் நிவாரணத்திற்கு நிதி வழங்கிய நடிகர் கார்த்தி:
இதுகுறித்து, கார்த்தி தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்... "ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத மழையால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன், குறிப்பாக, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் முதன்மையான தொழிலாக விவசாயம் உள்ளதால் இப்புயலில் விவசாயிகள் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊடகங்களில் வெளிவரும் செய்திகளைவிட கள நிலவரம் மிக மிக மோசமானதாக உள்ளது.
விவசாயிகளை காப்பாற்றும் கால்நடைகள், வீடுகள், அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள், ஆயிரக்கணக்கான கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், மோட்டார்கள். இன்னும் பிற உடைமைகள் என அனைத்தும் ஒரே இரவில் நாசமாகியுள்ளன. விவசாயத்திற்கு தேவைப்படும் மொத்த அமைப்பும் ஒரே இரவில் சீர்குழைந்துள்ளது.
ஏற்கனவே தங்கள் விளைப் பொருட்களுக்கு உரிய விலை இல்லாமல் தங்கள் உழைப்பை கொடுத்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மொத்தமாக இப்புயல் புரட்டி போட்டுள்ளது. இந்நேரத்தில் மத்திய மாநில அரசுகள் நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்வதோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விளைப் பொருட்கள், கால்நடைகள் மற்றும் உடைமைகளுக்கு உரிய மதிப்பீட்டை ஆராய்ந்து இழப்பீட்டை வெகு விரைவாக வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு இந்த இழப்பீடு மட்டுமே அவர்களின் ஒரே நம்பிக்கையான விவசாயத்தையும், அதற்கான பிற பணிகளையும் மீண்டும் தொடங்க பெருந்துணையாக இருக்கும். எனவே மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் இழப்புகளை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாயிகளின் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இதற்கு முதல்படியாக என் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 15,00,000/- (பதினைந்து இலட்சம்) நிவாரணத் தொகையாக அளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சூர்யா எங்கே?
எப்போதும் சூர்யாவுடன் சேர்ந்தே நிவாரண தொகையை கொடுக்கும் கார்த்தி இந்த முறை, தனி ஆளாக வந்து நிவாரணம் வழங்கி உள்ளது பல சந்தேகங்களை ரசிகர்களுக்கு எழுப்பி உள்ளது. சில ரசிகர்கள் உங்களுக்கும் அண்ணன் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனையா என கேள்விகளை கேட்டு கொளுத்தி போட்டு வருகிறார்கள். ஒரு வேலை அப்படி இருக்குமோ?