தமிழ், தெலுங்கு, இந்தியிலும் மிகவும் முக்கியமான நடிகராக உலா வருபவர் சித்தார்த். இவரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் சித்தா. இந்த படம் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியிலும் வெளியாகியுள்ளது.
பிரச்சினை செய்த கன்னட அமைப்பு:
இந்த நிலையில், இந்த படத்தை கன்னடத்தில் பிரபலப்படுத்தும் விதமாக பெங்களூரில் நடைபெற்ற விழாவில் சித்தார்த் இன்று பங்கேற்றார். தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த சூழலில், தமிழ்நாட்டிற்கு காவிரி நதிநீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் நாளை கர்நாடக முழுவதும் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று பெங்களூரில் சித்தா படத்தின் ப்ரமோஷன் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கன்னட அமைப்பினர் உள்ளே புகுந்தனர். அவர்கள் மேடையில் அமர்ந்திருந்த சித்தார்த்தை நோக்கி கன்னடத்தில் ஏதோ கூறினர். மேலும், சித்தார்த்தை வெளியே செல்லுமாறும் அறிவுறுத்தினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சித்தார்த்திற்கு மிக அருகில் நின்று கொண்டு அவர்கள் சித்தார்த்தை மிரட்டும் தொனியில் பேசியதால் சித்தார்த் விழா மேடையில் இருந்து சிரித்துக்கொண்டே பாதியிலே இறங்கிச் சென்றார்.
பாதியில் சென்ற சித்தார்த்:
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகவிற்கும் இடையே நீண்ட காலமாக நதிநீரை பங்கீட்டுக் கொள்வதில் பிரச்சினை உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த செவ்வாய்கிழமை பெங்களூரில் மட்டும் பந்த் நடைபெற்ற நிலையில், நாளை கர்நாடக முழுவதும் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் அதிருப்தி:
இதனால், தமிழக – கர்நாடக எல்லையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ள சூழலில், கர்நாடக மாநிலம் முழுவதும் அந்த மாநில போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் கன்னட அமைப்பினர் சித்தா பட நிகழ்ச்சியின் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னட படமான கே.ஜி.எஃப்.க்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு அளித்து ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், தமிழ் படத்தின் நிகழ்ச்சியில் அந்த மாநில கன்னட அமைப்புகள் இவ்வாறு நடந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இடாகி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை பண்ணையாரும், பத்மனியும் மற்றும் சேதுபதி படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார்.