தன்னிடமும் தன் பெற்றோரிடம் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசி கடுமையாக நடந்துகொண்ட விமான நிலைய அலுவலர்களைக் கண்டித்து நடிகர் சித்தார்த்  பகிர்ந்த பதிவு பேசுபொருளாகி உள்ளது.


தெலுங்கில் ’மஹா சமுத்திரம்’ படத்தில் இறுதியாக நடித்திருந்த நடிகர் சித்தார்த், தற்போது கமல்ஹாசனுடன்   ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.






இச்சூழலில் முன்னதாக மதுரை விமான நிலையம் வழியே பயணித்த தன்னிடம் சிஆர்பிஎஃப் அலுவலர்கள்  கடுமையாக நடந்து கொண்டதாகவும், ஆங்கிலத்தில் பேசக்கோரி கேட்டும் தங்களிடம் இந்தியில் பேசியதோடு, “இந்தியாவில் இப்படிதான் நடந்து கொள்வோம்” எனக் கூறியதாகவும் சித்தார்த் தெரிவித்துள்ளார்.


இது குறித்து தன் இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ள சித்தார்த், "சிஆர்பிஎஃப் அலுவலர்களால் மதுரை விமான நிலையத்தில் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானோம். எனது வயதான பெற்றோரிடம் பைகளில் இருந்து நாணயங்களை எடுக்குமாறு கோரினார்.  மேலும் ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டும் தொடர்ந்து எங்களிடம் இந்தியிலேயே பேசினார்கள்.


இது மிகவும் மோசமான செயல். நாங்கள் எதிர்த்து கேட்டபோது இந்தியாவில் இது இப்படிதான் இருக்கும் எனப் பேசினார்கள். வேலையில்லாதவர்கள் தங்கள் அதிகாரத்தை இப்படியெல்லாம் காண்பிக்கிறார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.




சித்தார்த்தின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.


வங்கிகள், விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன. இதேபோல் திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பலர் விமான நிலையங்களில்  இந்தி பேசச்கூறி பாதுகாப்பு அதிகாரிகளால் கட்டாயப் படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுப்பியிருந்தது, குறிப்பிடத்தக்கது.