பாலிவுட் நடிகை கங்கனா, பொதுவாகவே சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பார். இவரின் நடிப்பு திறனுக்கு புகழ் பெற்று விளங்கினாலும், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். சமூகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும், தன் கருத்தினை முதலில் வெளிப்படுத்தும் ஆட்களில் இவரும் ஒருவர். பெண்கள் சுதந்திரத்திற்கு குரல் கொடுக்கும் வகையில் அவ்வப்போது ஏதாவது ஒரு போஸ்ட் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது கங்கனாவின் போஸ்ட் பெற்றோர்களை குறித்தது.
சமீபத்தில் ஹாலிவுட் நட்சத்திரமான கேட் வின்ஸ்லெட் பிபிசிக்கு அளித்த பேட்டியில், இன்றைய குழந்தைகள் சமூக ஊடகத்தை எந்த அளவிற்கு பயன்படுத்துகிறார்கள் மற்றும் அதை எப்படி சரியான முறையில் ஒழுங்குபடுத்த முடியும் என்பது குறித்து விரிவாக பேசியிருந்தார். இது குறித்து மனம் திறந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் ஒரு குறிப்பை பதிவிட்டு இருந்தார் கங்கனா ரனாவத்.
கங்கனா ரனாவத் தனது பதிவில் "பலரும் இன்று தனது குழந்தை பருவம் குறித்தும் அவர்களின் பெற்றோர்களின் வளர்ப்பு குறித்தும், தோல்விகளுக்கு காரணமாக பெற்றோர்களையும் பெற்றோர்களின் வளர்ப்பையும் குறை கூறி வருவதையும் நான் அதிகமாக காண்கிறேன். இது என்னை வேறு விதமாக உணர வைக்கிறது. ஒரு குழந்தையை பெரும்பாடு பட்டு இந்த உலகத்திற்கு கொண்டு வருகிறார்கள். அது நிச்சயமாக ஒரு தன்னலமற்ற செயல்" என்றுள்ளார் கங்கனா.
மேலும் கங்கனா ரனாவத் தனது பெற்றோர்களுக்கு பைவ் ஸ்டார்களை கொடுத்துள்ளார். " என்னுடைய தந்தை அவரின் பிசினஸில் இருந்தது பணத்தை எடுத்து என்னை சண்டிகரில் உள்ள ஒரு சிறந்த இன்ஸ்டிடியூஷனில் படிக்க வைத்தார். ஆனால் அதை பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியேறினேன். அவர் அப்போதும் போகட்டும் என்ற ஒரே வார்த்தையை சொன்னதால்தான் நான் இன்று நிரூபிக்க முடிந்தது.
எனது பெற்றோர் எனக்காக செய்த அனைத்து காரியங்களுக்காகவும் நான் அவர்களுக்கு என்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன். அவர்கள் சிறந்த பெற்றோர்கள். மற்றவர்களும் அப்படித்தான். அவர்கள் மீது மரியாதையுடனும் நன்றியுடனும் இருங்கள். தங்களால் முடிந்ததை செய்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்" என பெற்றோர்களுக்காக உரிமையை கொடியை ஏற்றி இருந்தார் கங்கனா ரனாவத்.