நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
10 வயதில் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கி 49 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக் மகுடம் சூடியவர் சிவாஜி கணேசன். மறைந்த முன்னாள் முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை எழுதிய “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” என்ற மேடை நாடகத்தில் சிவாஜி என்ற கேரக்டரை வி.சி.கணேசன் ஏற்று நடித்தார். அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தந்தை பெரியார், வி.சி.கணேசனை “சிவாஜி கணேசன்” என மாற்றினார்
1952ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திரைக்கதை, வசனத்தில் உருவான பராசக்தி படத்தில் அறிமுகமான சிவாஜி கணேசனின் நடிப்பு பட்டிதொட்டி எல்லாம் மக்களை சென்று சேர்ந்தது. திரையில் சிவாஜி ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு கிட்டதட்ட தமிழில் மட்டும் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ர வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், கர்ணன், ராஜராஜ சோழன் போன்ற பல ஆளுமைகளை கண்முன்னே நிறுத்தினார்.
நாயகனாக மட்டுமில்லாமல் தேவர் மகன் , படையப்பா போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து நடிப்பில் தனது முதிர்ச்சியை காட்டினார். எகிப்து அதிபர் கமல் அப்தெல் நாசர் இந்தியா வந்தபோது அவரை சந்தித்து உபசரிக்க அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அனுமதித்த ஒரே நபர் சிவாஜி மட்டும் தான். இவர் நியூயார்க் மாகாணத்தில் உள்ள நயாகரா நகரின் ஒரு மேயராக கௌரவ பதவி வகித்துள்ளார். சிவாஜி கணேசனைப் பற்றிய பல தகவல்கள் பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரிந்தது தான் என்றாலும் தனது வாழ்நாளில் சிவாஜி கணேசன் செய்த நன்கொடைகள் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை
ரூ 310 கோடி நன்கொடை
40 ஆண்டுகாலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சுமார் ரூ 310 கோடி வரை பல்வேறு காரணங்களுக்காக நிதியுதவியாக வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வி , மருத்துவம் , பேரிடர் மீட்பு நிதி , கலாச்சார மேம்பாட்டிற்கு என பல்வேறு காரணங்களுக்காக தொடர்ச்சியாக உதவிவந்தவர் சிவாஜி கணேசன். இதில் 1968 ஆம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு ரூ 1 லட்சம் நன்கொடையாக வழங்கினார். அதே ஆண்டில் வெல்லூரில் ஒரு மருத்துவமனை கட்டுமானத்திற்கு 2 லட்சம் . உலக தமிழ் மாநாட்டில் திருவள்ளுவர் சிலைக்கு ரூ 5 லட்சமும் கட்சிப் பணிகளுக்காக பெருந்தலைவர் காமராஜருக்கு 3.5 லட்சம் கொடுத்து உதவினார் சிவாஜி கணேசன். சென்னை கோடம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் சிலையை நிறுவ ரூ 50 ஆயிரம் வழங்கினார். இப்படி பலவேறு காரணங்களுக்கு சிவாஜி கணேசன் வழங்கிய நிதி ரூ 310 கோடி என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.