விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை தடுத்து தாக்க முற்பட்ட நாம் தமிழர் கட்சியினர்: கட்சியினரோடு சேர்ந்து சீமானும் தாக்க முற்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் செஞ்சி கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னன் சிவாஜி கட்டிய கோட்டை என ஒன்றிய அரசு பரிந்துரைந்த நிலையில் யுனெஸ்கோ நிறுவனம் செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. இந்நிலையில் செஞ்சி கோட்டை மராட்டியர் கட்டிய கோட்டை இல்லை என்றும் தமிழரான கோனேரிக்கோன் என்ற மண்னன் கட்டிய கோட்டை, எனவே செஞ்சி கோட்டை பெயரை கோனேரிக்கோன் கோட்டை என பெயர் மாற்றம் செய்யவேண்டும். மராட்டியர் கட்டிய கோட்டை என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி செஞ்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சீமான் உரையாற்ற துவங்கும் போது அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் அனுமதிக்க மறுத்து உள்ளே விடாமல் தடுத்துள்ளனர். இதுகுறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களை அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த சீமான் திடீரென கீழே இறங்கி ஓடி வந்து கைகளை முறுக்கி செய்தியாளர்களை தாக்க முற்பட்டார். இதனால் அங்கு பெரும் பதட்டமான சூழல் உருவானது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் இரு தரப்பினரையும் தடுத்து செய்தியாளர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். செய்தியாளர்களை செய்தி எடுக்க விடாமல் தடுத்து தகாத வார்த்தைகளில் பேசிய கட்சியினரை தடுக்காமல், கட்சியின் தலைவர் என்பதை மறந்து மேடையில் இருந்து குதித்து குண்டர்களை போல சீமானும் தாக்க முற்பட்ட சம்பவம் அங்கிருந்து பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.