இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 


தமிழில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உருவானார் அட்லீ. இவர் தற்போது இந்தி திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். முதல் படமே பாலிவுட் பாட்ஷா என்றழைக்கப்படும் நடிகர் ஷாரூக்கானை வைத்து எடுத்துள்ளார். ரெட் சில்லி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ‘ஜவான்’ என பெயரிடப்பட்டுள்ளது. 


இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாகவும், வில்லனாக விஜய் சேதிபதியும் நடித்துள்ளனர்.  மேலும் தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்களும் ஜவான் படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் மூலம் அனிருத் இசையமைப்பாளராக இந்தியில் அறிமுகமாகியுள்ளார். ஜவான் படம் செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நிறைவடைந்து படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


இதுவரை இப்படத்தில் இருந்து 3 பாடல்களும், ட்ரெய்லர் ஒன்றும் வெளியாகி இருந்தது. மேலும் அவ்வப்போது ஜவான் படத்தின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது. இப்படியான நிலையில்  சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ‘ஜவான்’ படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஷாருக்கான், இயக்குநர் அட்லி, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட படக்குழுவினர்  கலந்து கொண்டனர். இதில் ஷாருக்கான் தொடங்கி அனைவரது பேசியதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 


இந்நிலையில் ஜவான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில், “ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம். அவன் அடுத்தடுத்த போர்ல தோத்து போனானாம். நல்ல பசியில தோத்து போன வெறியில பயங்கர கோவத்துல காட்டுல சுத்திட்டு இருந்தாரு என்ற பின்னணி வசனத்துடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. இதில் மெட்ரோ ரயிலை ஷாரூக்கான் தனது கட்டுப்பாட்டில் கடத்தி வைத்திருப்பதாகவும், அவரிடம் காவல்துறை அதிகாரியான நயன்தாரா பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் காட்சிகள் அமைகிறது.


இதில் வில்லனாக வரும் விஜய் சேதுபதி வயதான தோற்றத்தில் ஒருப்பதால் பிளாஸ்பேக் காட்சிகளில் அப்பா ஷாருக்கான் வருவார் என தெரிகிறது. அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே இருக்கிறார். காலிஸ் என்ற வில்லனாக வரும் விஜய் சேதுபதி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ட்ரெய்லர் பல காட்சிகள் தமிழில் விஜய் நடித்த வில்லு, மெர்சல், பீஸ்ட் ஆகிய படங்களின் காட்சிகளை போல இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.