பிரதமர் மோடியை டெர்மினேட்டர் ரோபோ போன்று சித்தரித்து பாஜக வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


பாஜக போட்ட டிவீட்:


எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்று தொடங்க உள்ளது. இந்த சூழலில் பாஜக வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் “பிரதமர் மோடியை வீழ்த்தலாம் என எதிர்க்கட்சிகள் நினைக்கலாம். கனவு காணுங்கள், எப்போதுமே டெர்மினேட்டர் மட்டுமே வெற்று பெறுவார்” என குறிப்பிட்டுள்ளது.






”டெர்மினேட்டர் மோடி”


அந்த டிவீட்டில் பாஜக புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் “அர்னால்ட் நடிப்பில் வெளியான ஹாலிவுட் படமான டெர்மினேட்டர் கதாபாத்திரத்தில், அர்னால்டின் உடலில் பிரதமர் மோடியின் தலை ஒட்டப்பட்டுள்ளது. கையில் துப்பாக்கிக்கு பதிலாக, பாஜகவின் சின்னமான தாமரை மலர் இடம்பெற்றுள்ளது. பின்புறத்தில் நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது. அந்த புகைப்படத்தின் மேல், நரேந்திர மோடி தி டெர்மினேட்டர் 2024, நான் மீண்டும் வருவேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


விமர்சிக்கும் பாஜக:


எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணியை ஆரம்பம் முதலே பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்து ஊழல்வாதிகளின் கூட்டணி எனவும், நாட்டை கொள்ளையடிக்கவும், தங்களது வாரிசுகளுக்கு அதிகாரத்தை வழங்கவுமே, எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்துள்ளதாக சாடி வருகிறது. அதேநேரம், நாளுமன்ற மற்றும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாஜக பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, எரிவாயு சிலிண்டரின் விலையை அண்மையில் மத்திய அரசு 200 ரூபாய் குறைத்து அறிவித்தது. இந்நிலையில் தான், பிரதமர் மோடி 2024ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவார் என பாஜக தெரிவித்துள்ளது.


I.N.D.I.A கூட்டணி:


இந்நிலையில் பாட்னா மற்றும் பெங்களூருவை தொடர்ந்து மும்பையில், எதிர்க்கட்சி கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தொகுதிப் பங்கீடு, 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர்களைத் தேர்வு செய்வது, அனைத்து மாநிலங்களிலும் கூட்டணியின் பணியை சீரமைக்க கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது,  கூட்டணியின் அதிகாரப்பூர்வ சின்னம் வெளியிடுவது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இந்த கூட்டணியில் புதியதாக இரண்டு கட்சிகள் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.