ஜவான்  (Jawan) படம் ரிலீசாகவுள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ஷாருக்கான், நடிகை நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர்  சாமி தரிசனம் செய்துள்ளனர். 


இந்திக்கு சென்ற அட்லீ 


பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அட்லீ. இவர் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உருவானார். குறிப்பாக நடிகர் விஜய்யை வைத்து தொடர்ந்து 3 படங்கள் இயக்கியதால் அதன் எதிரொலியாக இந்தி சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். இந்தி திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகியுள்ள அட்லீ முதல் படமே பாலிவுட் பாட்ஷா என்றழைக்கப்படும் நடிகர் ஷாரூக்கானை வைத்து ’ஜவான்’ படத்தை இயக்கியுள்ளார். ரெட் சில்லி நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் இந்த படத்தை தயாரிக்கிறார். 


ஜவான் படத்தில் நயன்தாரா ஹீரோயினாகவும், வில்லனாக விஜய் சேதிபதியும் நடித்துள்ளனர்.  மேலும் தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்களும் இணைந்துள்ளனர். இந்த படம் நாளை மறுநாள் (செப்டம்பர் 7) ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதற்கான முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திரும்பும் இடமெல்லாம் ஜவான் படத்தின் போஸ்டர், பேனர்கள் தெரிகிறது. 






திருப்பதி சென்ற படக்குழு


இந்நிலையில் ஜவான் படத்தின் ரிலீசையொட்டி படக்குழுவினர் அனைவரும், படம் வெற்றிப் பெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வில் ஷாருக்கான், அவரது மகள் சுஹானா கான், நயன்தாரா, விக்னேஷ் சிவன், கௌரி கான் ஆகியோர் தரிசனம் முடித்து விட்டு வெளிவரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. ஷாருக்கான் மற்றும் நயன்தாராவை பார்த்த பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.




மேலும் படிக்க: Teachers Day 2023: ஆசிரியர் தினம் இன்று.. தமிழ் சினிமாவில் கொண்டாடும், கொண்டாடப்பட வேண்டிய ஆசிரியர்கள் இவர்கள் தான்..!