நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் இந்தியா முழுவதும் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருவது வழக்கம். இப்படியான நிலையில் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும், கொண்டாடப்பட வேண்டிய ஆசிரியர் கதாபாத்திரங்கள் பற்றி காணலாம். 


பெரும்பாலும் உருட்டி மிரட்டும் ஆசிரியர்களை விட, அன்பாக அரவணைத்து செல்லும் ஆசியர்களை திரையில் அல்ல நேரிலும் ரசிகர்கள் விரும்புவார்கள். 


கொண்டாடப்படும் சினிமா ஆசிரியர்கள்


நம்மவர் படத்தில் கமல்ஹாசன்  


1994 ஆம் ஆண்டு கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் கமல்ஹாசன், கௌதமி, கரண் ஆகியோர் நடித்த படம்  'நம்மவர்'. இந்த படத்தில் செல்வன் என்ற கேரக்டரில் கல்லூரி ஆசிரியராக கமல் நடித்திருந்தார்.  இந்த கேரக்டர் நாம் ஏதோ ஒரு வகுப்பில் நிச்சயம் சந்தித்திருப்போம். அந்த ஆசிரியரின் பார்வையில் கல்வி என்பது அச்சடிக்கப்பட்ட புத்தகங்களுக்குள் மட்டும் இருக்காது, விசாலமான பார்வைகள் தான் சமூகத்தை கற்றுக்கொள்ள உதவும் என இருக்கும்.  பாலின பாகுபாடுகளை உடைப்பது, அடாவடித்தனம் செய்யும் மாணவர் பக்கம் நின்று யோசிப்பது என படம் முழுக்க ஆசிரியரின் செயல்பாடுகளை தெளிவாக கையாண்டிருப்பார். 


தர்மத்தின் தலைவன் - ரஜினி 


1988 ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினிகாந்த், சுஹாசினி, பிரபு, குஷ்பு, விகே ராமசாமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் இரட்டை வேடங்களில் ரஜினி நடித்திருந்தார். இந்த படத்தில் பேராசிரியர் பாலுவாக சாந்தமான பேராசிரியராக ரஜினி நடித்திருப்பார். 


ரமணா - விஜயகாந்த் 


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ரமணா’ படத்தில் நடிகர் விஜயகாந்த் கல்லூரி பேராசிரியராக வருவார். சமூகத்தில் நிலவும் ஊழலை உணர்ந்து  அதை எதிர்த்துப் போராட மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் அந்த படம் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் ஆக உள்ளது. கிளைமேக்ஸ் காட்சியில் மாணவர்களுக்கு ஒரு பேராசிரியராக அவர் பேசும் உரை யாராலும் மறக்க முடியாது. 


மாஸ்டர் - விஜய் 


கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், அவர் நடித்த 'நம்மவர்' படத்தில் இடம் பெற்ற செல்வன் கேரக்டரை போல மாஸ்டர் படத்தில் விஜய்யின் கேரக்டரை உருவாக்கியிருந்தார்.  மாணவர்களுடனான ஆசிரியரின் அணுகுமுறை, மாணவர்களுக்கு அரசியல் தேவை உள்ளிட்ட சில விஷயங்களை பேசியிருப்பார்கள். 


சாட்டை - சமுத்திரகனி 


ரேங்க் மற்றும் மதிப்பெண் ஒரு மாணவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்காது. அவர்களுக்கு என்ன வரும் என்பதை அறிந்து சொல்லி கொடுத்தால் எளிதாக ஆசிரியருக்கும், மாணவருக்கும் வெற்றி கிடைக்கும் என்பதை ‘சாட்டை’ படம் விளக்கியிருந்தது. இந்த படத்தில் தயாளன் என்னும் கேரக்டரில் சமுத்திரகனி ஆசிரியராக நடித்திருப்பார். நல்ல ஆசிரியர் vs மோசமான ஆசிரியர் என்ற பாணியிலான கதையில் மாணவர்களிடையேயான தயக்கம், பாலின பிரச்சினைகள் என அனைத்தையும் பேசிய விதத்தில் கவனிக்கத்தக்க வகையில் இருந்தது. 


இதேபோல் அம்மா கணக்கு படத்தில் ரங்கநாதன் என்னும் ஆசிரியர் கேரக்டரில் சமுத்திரகனி நடித்திருப்பார்.சாட்டை 2 படத்திலும் சமுத்திரகனி தான் டீச்சர். 


ராட்சசி - ஜோதிகா


2019 ஆம் ஆண்டு வெளியான ராட்சசி படத்தில் கீதா ராணி என்னும் கேரக்டரில் ஜோதிகா பள்ளி தலைமை ஆசிரியராக நடித்திருந்தார். மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் அரசு பள்ளியை பிரச்சினை கொடுக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசியல்வாதிகளுக்கு மத்தியில்  எப்படி முன்னேற்றி கொண்டு வருகிறார் என்பதே இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது. 


வாகை சூடவா - விமல் 


2011 ஆம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் வெளியான வாகை சூடவா படத்தில் விமல், ‘வேலுதம்பி’ என்னும் ஆசிரியர் கேரக்டரில் நடித்திருந்தார்.  தமிழில் கல்வியின் முக்கியத்துவத்தை ஆழமாக சொல்லியிருக்கும் படங்களில் ஒன்று இப்படமாகும். தான் செங்கல் சூளையில் முதலாளி வர்க்கத்தால் சுரண்டப்படுவதை உணர்ந்த பெண் தன் மகனை ஆசிரியரான விமலிடம் அழைத்து வந்து, “என் பிள்ளைக்கு எதையாச்சும் சொல்லிக்கொடுயா” என சொல்லும் அந்த ஒரு காட்சி கல்வி எப்படிப்பட்ட முக்கியத்துவம் கொண்டது என்பதற்கு சான்று. 


பட்டாளம் - நதியா 


பதின்பருவ மாணவ, மாணவியர்களின் குறும்புகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்திய இப்படத்தில் ஆசிரியையாக நடித்து பாராட்டைப் பெற்றிருந்தார் நதியா. 


பேராண்மை - ஜெயம் ரவி 


பழங்குடியினத்தைச் சேர்ந்த படித்த ஜூனியர் காட்டு இலாகா அதிகாரியான ஜெயம் ரவி, அங்கு என்சிசி பயிற்சிக்காக வரும் மாணவிகள் படைக்கு அதிகாரியாக வருகிறார். அதில் காட்டுக்குள் 5 மாணவிகளை தேர்வு செய்து நாட்டுக்கு எதிராக நிகழப்போகும் ஆபத்தை தடுப்பதே இப்படத்தின் கதை. ஆனால் சாதிய அடக்குமுறையாலும், முதலாளித்துவத்தாலும் புறக்கணிக்கப்பட்டாலும், கல்வியும்,  திறமையும் தான் நம்மை மேலும் பலப்படுத்தும் என்பதை பொட்டில் அடித்தாற்போல் உணர்த்தியது இப்படம். 


கொண்டாடப்பட வேண்டிய ஆசிரியர்கள்


மேலே குறிப்பிடப்பட்டவர்கள் காலம் காலமாக கொண்டாடப்பட்டாலும் நாம் சில படங்களில் இடம்பெறும் இந்த ஆசிரியரின் கேரக்டர்களை தவற விட்டிருப்போம். 



  • கற்றது தமிழ் படத்தில் இடம் பெறும் அழகம் பெருமாள் கேரக்டர். பெற்றோரை இழந்த மாணவனை அன்பாக அரவணைத்து ‘பிரபாகர்’ (ஜீவா) என்னும் முழு மனிதனாக மாற்றியிருக்கும். ஆசிரியர் மேல் கொண்ட அன்பால் பிரபாகர் வாழ்க்கையை எப்படியாக மாற்றியது என்பது அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

  • 'தர்மதுரை படத்தில் படத்தில் இடம் ராஜேஷ் கேரக்டர். இந்த படத்தில் காமராஜ் என்ற கேரக்டரில் அவர் நடித்திருப்பார். தன்னிடம் படித்த மாணவன் சமூகத்துக்கு நல்லது செய்யும் விஷயத்தில் பெருமைப்படும் ஆசிரியரின் ஈடு இணையே கிடையாது என இந்த கேரக்டர் உணர்த்தியிருக்கும். 

  • 'பரியேறும் பெருமாள்' படத்தில் பூ ராமு கேரக்டர்.  சாதிய அடக்குமுறையிலிருந்து ஒருவர் தன்னை விடுவித்துக்கொள்ள கல்வி தான் சிறந்த ஆயுதம் என்பதை ஆணித்தரமாக உணர்த்தியிருக்கும் கேரக்டர்.  அன்னைக்கு என்னைய அடக்கணும்னு நெனைச்சவன்லாம் இன்னைக்கு ஐயா சாமின்னு கும்பிடுறான் என படிப்பு ஒருவரை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதை சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.