தவெக வுடன் கூட்டணி அமைக்கப்போவது யார் ?


நடிகர் விஜய் கடந்த மே மாதம் தனது சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கினார். கட்சி பற்றிய முதல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே தமிழக அரசியல் களத்தில் இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாடு நடைபெற்றது.  மாநாட்டில் பேசியத விஜய் பெரியாரின் கொள்கைகளை தனது கட்சி பின்பற்ற இருப்பதாகவும் ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகளை தான் ஏற்கவில்லை என்றும் கூறினார். பிளவுவாத சக்திகளும் ஊழல் மலிந்த அரசும் தனது கட்சியின் முக்கிய எதிரிகள் என்று விஜய் தெரிவித்தார். ஊழல் மலிந்த திராவிட மாடல் ஆட்சி என்று விஜய் ஆளும் திமுக அரசை நேரடியாகவும் விமர்சித்தார் . தனது கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என விஜய் தெரிவித்தது மற்ற அரசியல் கட்சிகளிடம்  பெரும் ஆதரைப் பெற்றுள்ளது. இப்படியான நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயுடன் எந்த கட்சிகள் கூட்டணி அமைக்கப்போகின்றன என்பது விவாதப்பொருளாக மாறியுள்ளது


தவெக வில் இணைவது குறித்து நடிகர் சத்யராஜ்


திரைத்துறையைப் பொறுத்தவரை விஜய்க்கு பலதரப்பில் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது. பல முன்னணி நடிகர்கள் விஜயின் அரசியல் வருகை குறித்து பாசிட்டிவான கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். மேலும் சில நடிகர்கள் தவெகவில் இணையவும் செய்துள்ளார்கள். நிகழ்ச்சி ஒன்றில் தவெகவில் இணைவது குறித்து நடிகர் சத்யராஜ் கூறியுள்ள பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 


" விஜயை நான் சின்ன வயதில் இருந்து பார்த்து வருகிறேன். இவ்வளவு தூரம் வந்து மேடையில் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. ரொம்ப தன்னம்பிக்கையுடன் பேசினார். எங்களுடைய கொள்கை தலைவர் பெரியார் என்று சொன்னதில் எங்களுக்கு எல்லாம் ரொம்ப மகிழ்ச்சி. தவெக வில் இருந்து அழைப்பு வந்தால் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கேட்பேன். நம்ம விஜய்தான அதெல்லாம் கேட்டால் குடுப்பார். பெரியாரின் கொள்கைகளை பரப்பும் பதவி எனக்கு கொடுங்கள் என்று கேட்பேன்." என சத்யராஜ் தெரிவித்துள்ளார்.


சத்யராஜ் தற்போத் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் நடித்துள்ள ஜீப்ரா திரைப்படம் நாளை நவம்பர் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.