நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 94.
தமிழ் சினிமாவில் வில்லனாகத் தொடங்கி ஹீரோவாக உயர்ந்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் சத்யராஜ். நடிகர், தயாரிப்பாளர், வில்லன் நடிகர், காமெடி, ஆக்ஷன் என நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்று, தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக கடந்த 45 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சத்யராஜ் வலம் வருகிறார்.
இவரது தாயார் நாதாம்பாள் கோயம்புத்தூர், ராம் நகரில் வசித்து வந்த நிலையில், வயது மூப்பின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு காலமானார்.
நாதாம்பாளுக்கு சத்யராஜ் ஒரே மகன் ஆவார். கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் இருந்த சத்யராஜ் தற்போது கோவை விரைந்துள்ளார்.
வில்லன் கதாபாத்திரத்தில் தனக்கென தனி முத்திரையைப் பதித்து படிப்படியாக ஹீரோவாக உருவெடுத்ததுடன், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என தென்னிந்தியாவின் பிரபல நடிகர்களுள் ஒருவராக சத்யராஜ் வலம் வருகிறார்.
தற்போது தமிழ், தெலுங்கு சினிமாக்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து வரும் சத்யராஜ் சமீபத்தில் தான் 45 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவு செய்தார்.
தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசனின் சட்டம் என் கையில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சத்யராஜ், தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து கவனமீர்த்தார். தொடர்ந்து மணிவண்ணன் இயக்கிய நூறாவது நாள் திரைப்படம் சத்யராஜூக்கு திருப்புமுனையாக அமைந்த நிலையில், சாவி படத்தின் மூலம் 1985ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார்.
மேலும் ஹீரோ, குணச்சித்திரக் கதாபாத்திரம் என வலம் வந்துள்ள சத்யராஜ் கடந்த ஜூலை 14ஆம் தேதி தான் சினிமா துறையில் தன் 45 ஆண்டுகளை நிறைவு செய்தார்.
இந்நிலையில் சத்யராஜின் தாய் நாதாம்பாளின் இறுதிச் சடங்குகள் கோயம்புத்தூரில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சத்யராஜ் நடிப்பில் இறுதியாக தீர்க்கதரிசி திரைப்படம் வெளியானது. அடுத்ததாக நடிகர் சத்யராஜ் , வசந்த் ரவியுடன் இணைந்து நடித்துள்ள வெப்பன் படம் வெளியாக உள்ளது.
மனிதர்களால் அழிக்க முடியாத மனித ஆயுதமான வித்தியாசமான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். சத்யராஜூக்கு கிடைக்கும் சூப்பர் பற்றி உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.