நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ஜெயிலர் படத்தில் நடிகர் சரவணன் என்ன மாதிரியான கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்தும், பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர்.
இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
கடந்தாண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து படத்தில் இடம் பெற்றுள்ள தீம் மியூசிக்கை படக்குழு செப்டம்பர் மாதம் வெளியிட்டது.ஜெயிலர் படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் நேபாளத்தில் நடைபெறும் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் சில தினங்கள் முன்பு நேபாளம் சென்ற வீடியோ வைரலானது.
இதனிடையே ஜெயிலர் படத்தில் நடிகர் சரவணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதுபற்றி படக்குழு அறிவிப்பு வெளியிடாவிட்டாலும் சமீபத்திய நேர்காணல்களில் இதனை சரவணன் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் சுமார் 30 நிமிடங்கள் ரஜினியுடன் வரும்படியான காட்சிகளில் தான் நடித்துள்ளதாகவும், படம் வெளியானால் நிச்சயம் ரசிகர்கள் என்னை திட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல் ரஜினி ரசிகரான தனக்கு அவருடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சி எனவும் சரவணன் கூறியுள்ளார்.