தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் சிறந்த  குணசித்திர நடிகர்களில் ஒருவரான சரத்பாபு (71 வயது) நேற்று காலமானார். பல்வேறு உறுப்புகள் செயலிழந்த நிலையில் சென்னையில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று காலை நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை மோசமடைந்து உடல் உறுப்புகள் செயலிழந்து பிற்பகல் 1.30 மணியளவில் காலமானார். இதையடுத்து பிரதமர் மோடி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர். 


நல்லடக்கம்: 


நடிகர் சரத்பாபு(Actor Sarath Babu) உடல்நலக் குறைவால் நேற்று ஹைதராபாத்தில் காலமான நிலையில், அவரின் உடல் இன்று காலை சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு 9 மணிக்கு கொண்டுவரப்பட்டது. காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரை திரை பிரபலங்கள், ரசிகர்கள் நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த இருக்கின்றன. அதனை தொடர்ந்து, இன்று மதியம் 2 மணியளவில் கிண்டி தொழிற்பேட்டை சுடுகாட்டில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. 


யார் இந்த சரத்பாபு..? 


நடிகர் சரத் பாபு கடந்த 1951ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி ஆந்திராவில் பிறந்தார். 1973-ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி, பின் 1977ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கிய பட்டினப் பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து, பாபா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மேலும், தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.


திருமண வாழ்க்கை: 


நடிகர் சரத்பாபு நடிகை ரமாபிரபாவை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார். அதன்பிறகு ஒரு சில காரணங்களால் ரமாபிரபாவை பிரிந்த அவர், நடிகர் நம்பியாரின் மகள் சினேகாவை திருமணம் செய்து கொண்டார். பின்பு அவரை விவாகரத்து செய்தார். 


சினிமாவில் அவ்வப்போது குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த சரத்பாபு. ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். கடைசியாக இவர் தெலுங்கில் பவன் கல்யாண் உடன் வக்கீல் சாப் படத்திலும், தமிழில் கடைசியாக பாபி சிம்ஹா நடித்த ’வசந்த முல்லை’ என்னும் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சரத் பாபுவுக்கு உடல்நிலை சரியில்லாததால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களாகவே சரத் பாபு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். இந்தநிலையில், தொடர் சிகிச்சையில் இருந்து வந்த சரத்பாபு, நேற்று (மே 22) பிற்பகல் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.