ஆர்ஆர்ஆர் படத்தில் வில்லனாக நடித்து இருந்த ரே ஸ்டீவன்சன், தனது 58வது வயதில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அவரது மரணத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ரே ஸ்டீவன்சன் மரணம்:
ராஜமவுளி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வசூலை வாரிக்குவித்த திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தில் இடம்பெற்று இருந்த நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதையும் வென்று அசத்தியது. அதேநேரம், இந்த படத்தில் ஸ்காட் துரை எனும் ஆங்கிலேய கவர்னராக நடித்து கவனம் ஈர்த்தவர், ரே ஸ்டீவன்சன். தனது கட்டுமஸ்தான உடல்வாகுவுடன், ஆங்கிலேயர்களின் சர்வாதிகாரபோக்கை அப்படியே திரையில் காட்டி அசத்தி இருப்பார். இவரது நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது. இந்நிலையில், எதிர்பாராதவிதமாக தனது 58வது வயதில் ரே ஸ்டீவன்சன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறன்று அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தாலும், அவரது மரணத்திற்கான காரணம் எதுவும் தெளிவாக கூறப்படவில்லை. இவரது மரணத்திற்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த ஸ்டீவன்சன்:
மார்வெல் நிறுவனத்தின் தோர் படங்களில் ஆஸ்காட் வாரியராக நடித்துள்ள இந்த ரே ஸ்டீவன்சன், அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஆவார். கடந்த 1964ம் ஆண்டு லிஸ்பர்னில் பிறந்த இவர், மூன்று சகோதரர்களில் இரண்டாவது நபராவார். தனது 8வது வயதில் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்த அவர், பிரிஸ்டல் ஓல்ட் விக் தியேட்டர் பள்ளியில் படித்து பல ஆண்டுகள் பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் பணியாற்றிய பிறகு, பால் கிரீன்கிராஸின் 1998 திரைப்படமான தி தியரி ஆஃப் ஃப்ளைட்டில் திரைப்படத்தில் அறிமுகமானார்.
சினிமாவில் ஸ்டீவன்சன்:
2004ம் ஆண்டு Antoine Fuqua's King Arthur-ல் ரவுண்ட் டேபிளில் ஒரு குதிரை வீரராக தோன்றினார். அதன் பிறகு டிஸ்னி மார்வெலுக்கு முந்தைய தழுவலான Punisher: War Zone-ல் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். அது நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும், மீண்டும் மார்வெலின் மூன்று தோர் படங்களிலும் ஆஸ்காட் வாரியராக நடித்துள்ளார். இதோடு, டைவர்ஜென்ட் ட்ரையாலாஜி, ஜிஐ ஜோ: ரிடலியேஷன் மற்றும் தி டிரான்ஸ்போர்ட்டர்: ரீஃப்யூல்டு ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பல படங்களிலும் போர் வீரராக நடிப்பது குறித்து பேசிய அவர், நான் முந்தைய காலத்தில் ஒரு உண்மையான போர் வீரனாக இருந்திருப்பேன் போல என தெரிவித்துள்ளார்.
கடைசி படம் என்ன?
RRR படத்தை தொடர்ந்து தனது இறுதிப்படமாக ஆக்சிடென்ட் மேன்: ஹிட்மேன்ஸ் ஹாலிடே எனும் திரைப்படத்தில் ஸ்காட் அட்கின்ஸ் உடன் இணைந்து ஸ்டீவன்சன் நடித்து முடித்துள்ளார். HBO மற்றும் BBC இன் ரோமின் அனைத்து 22 அத்தியாயங்களிலும் அவர் இடம்பெற்றார். அவர் சமீபத்தில் கெவின் ஸ்பேசிக்கு பதிலாக 1242: கேட்வே டு தி வெஸ்ட் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதில், மங்கோலிய ராணுவத்திற்கு எதிராக நிற்கும் ஹங்கேரிய பாதிரியார் கதாபாத்திரத்தில் ஸ்டீவன்சன் நடிக்கவிருந்தார்.