இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இருந்த ஷங்கரை அவர் அடிப்பார் என நடிகர் சரண்ராஜ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 


தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்றழைக்கப்படும் இயக்குநர் ஷங்கர் ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் 1993 ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், 2.0 போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உள்ளார். தற்போது தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வரும் ஷங்கர் இயக்குநராவதற்கு முன்னர் நடிகர் விஜய்யின் அப்பாவும், பிரபல இயக்குநரான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். 


எஸ். பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ஷங்கர் காதல், வெயில், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், கல்லூரி, ஈரம், ரெட்டைச்சுழி ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். தமிழில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்தை இயக்கி வந்தார். படப்பிடிப்பில் நடந்த விபத்து உட்பட பல காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்-2 மீண்டும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 




இதற்கிடையில் ஜென்டில்மேன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் சரண்ராஜ் ஷங்கர் குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதாவது எஸ்.ஏ.சந்திரசேகர் படத்தில் நடித்த போது ஷூட்டிங்கில் என்ன தவறு நடந்தாலும் ஷங்கர் தான் அடி வாங்குவார். நான் தவறு செய்தாலும் ஷங்கரை கூப்பிட்டு அடிப்பார். அவரும் அழுதுக்கொண்டே இத்தனை பேரு இருக்கும் போது என்னை மட்டும் அடிக்கிறார் என சொல்லி புலம்புவார். நான் குருவின் கையால் அடிவாங்குவது பாக்கியம் என கூறி சமாதானப்படுத்துவேன். 




அதன்பிறகு நீ இயக்குநரானால் என்னை வந்து பாரு. நான் இலவசமாக நடித்து தருகிறேன் என கூறினேன். சொன்னபடி ஜென்டில்மேன் படத்துக்காக ஷங்கர் என்னை வந்து பார்த்தார். மொட்டையடிக்கும் படி சொன்னார். நான் முதலில் மறுத்தேன். பின்னர் எழுத்தாளர் பாலகுமாரன் என்னை தொடர்பு கொண்டு கிட்டதட்ட 2 மணி நேரம் கதையை சொல்லி முழுக்க முழுக்க என்னை அந்த கேரக்டாக நினைக்க வைத்தார். நீங்கள் படம் பார்த்தாலும் தெரியும். எனக்கு அந்த கேரக்டர் மேல் எவ்வளவு வெறி இருக்கும் என்று... ஆனால் அதன்பின் நான் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவேயில்லை என சரண்ராஜ் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண