நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகவுள்ள சிங்கப்பூர் சலூன் படம் குறித்து பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. 


வானொலி பண்பலை தொகுப்பாளராக இருந்து காமெடி நடிகராக, தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான அரசியல் காமெடி படமான எல்.கே.ஜி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ஆர்.ஜே.பாலாஜி. 


இதனையடுத்து நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அப்படத்தில் முதன்மை வேடத்திலும் நடித்திருந்தார். பின்னர் கடந்த ஜூன் மாதம் வெளியான வீட்ல விஷேசம் படத்திலும் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில் தான் சில தினங்களுக்கு முன் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் படம் உருவாகவுள்ளதாக தெரிவித்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.  


இதனை டி20 உலகக்கோப்பை இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையேயான அரையிறுதி  போட்டியின் போது கமெண்டரி நிகழ்வில் பங்கேற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். பலருக்கும் சம்பந்தமே இல்லாமல் ஏன் லோகேஷ் கனகராஜ்  இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பின்னால் சிறப்பான சம்பவம் ஒன்று உள்ளது. 






ஊடகம் ஒன்றில் வெளியான ஆர்.ஜே.பாலாஜி அளித்த நேர்காணலில், சிங்கப்பூர் சலூன் படம் குறித்து பல தகவல்களை தெரிவித்துள்ளார். அதன்படி வீட்ல விஷேஷம் படத்தை முடித்த சமயத்தில், ஒரு நடிகராக என்னை வைத்து என்ன செய்யலாம் என்று ஆர்வமாக இருந்த மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க விரும்பினேன். மேலும் எனது படங்களுக்கு நானே ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டிருந்ததால் எனது வரம்புகளை அறிந்து வேலை செய்வேன். 


லோகேஷ் கனகராஜ்ஜிடம் இருந்து வந்த அழைப்பு 


கடந்தாண்டு கொரோனா லாக்டவுனின் போது எனக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜிடமிருந்து அழைப்பு வந்தது. கோகுலிடம் ஒரு கதை உள்ளது கதை கேட்கலாமா, அப்படி உனக்கு கதை பிடித்திருந்தால் நானே தயாரிக்கிறேன் என்று சொன்னார். லோகேஷ் எனக்கு நல்ல நண்பர் என்பதால் அன்று மாலையே கோகுலை சந்தித்து கதை கேட்டேன். அதற்கு முன்னால் ரேடியோவில் பணியாற்றிய போது அவரது முதல் படமான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவை விளம்பரப்படுத்த வந்தபோது சந்தித்து இருக்கிறேன். 


திரையுலகில் சிறப்பாக கதை சொல்பவர்களில் கோகுலும் ஒருவர். இந்த கதை எனக்கு பிடித்திருந்தது. சொல்லப்போனால் முழுக்க முழுக்க சிரித்துக் கொண்டிருந்தேன். இதனைத் தொடர்ந்து படத்தின் கண்டிப்பாக என் கேரக்டருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன் என ஆர்.ஜே.பாலாஜி அதில் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இந்த படத்தில் முடி திருத்தும் நபராக நடிக்கும் பாலாஜி ஒன்றரை மாதங்கள் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றதாக தெரிவித்துள்ளார். 


முன்பெல்லாம் ஒரு நடிகர்கள் படத்துக்காக இதை செய்றாங்க, அதை செய்றாங்கன்னு கேள்விப்படும்போது இப்படியெல்லாம் பண்ணுவாங்களான்னு நினைப்பேன். தற்போது அதன் முக்கியத்துவம் எனக்கு புரியுது. எனது எல்லா படங்களிலும் நான் ஒரே மாதிரியாக  இருந்த நான் வீட்ல விசேஷம் படத்தில் கண்ணாடி இல்லாமல் நடித்தேன். நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்பதற்காக எனது தோற்றத்தை மாற்றவோ, ஜிம்மிற்கு சென்று உடலை கட்டமைக்கவோ விரும்ப வில்லை.  இந்த படத்துக்காக  என் வாழ்க்கையில் இவ்வளவு தாடி வளர்த்தது இதுவே முதல்முறை என ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.