வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலப்பகுதியை அடைந்ததையடுத்து, வடகடலோர தமிழக மாவட்டம், புதுச்சேரி பகுதிகளின் மேல் நிலைகொண்டுள்ளது.  இது இன்றும், நாளையும் தமிழக உள் மாவட்டங்கள், கேரளா வழியாக மேற்கு - வடமேற்கு திசையில் அரபிக்கடல் நோக்கி நகர்கிறது. பின்னர் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொள்ளும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிககனமழை பெய்யக்கூடும். நாளை(நவ.13) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 


இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை,  நாகப்பட்டினம், திருவாரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


அதேபோல் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 


சென்னையை பொறுத்தவரை நேற்று முதல் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. மேலும் 100 கி.மீ தொலைவில் கடல் பகுதியில் தொடர்ச்சியாக மேகக்கூட்டங்கள் இருப்பதால் விட்டுவிட்டு கன மழை பெய்யும். குறிப்பாக இரவு நேரங்களில் கன மழை நீடிக்கும். நேற்று சென்னையில் பெய்த மழை அளவு 6-9 செண்டி மீட்டராக பதிவாகியுள்ளது. நவம்பர் 14ஆம் தேதி வரை சுமார் 30 செ.மீ மழை பதிவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 




மேலும் தென்கிழக்கு வங்கக்கடலில் 16ஆம் தேதி மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுமா? மண்டலமாக மாறுமா? புயலாக வலுப்பெறுமா? தமிழகத்தை கடந்து செல்லுமா என்பது இது உருவான பிறகே கணிக்க முடியும். 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


12.11.2022: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய  குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும்  அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


13.11.2022: குமரிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள்,  தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும்  கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


14.11.2022: லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு மற்றும்  அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும்  கேரள கடலோரப்  பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


15.11.2022: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.