தமிழ் திரையுலகின் நடிகர், இயக்குனர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவராக உலா வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் விரைவில் சூர்யா நடிக்கும் 45வது படத்தை இயக்க உள்ளார். இவர் சொர்க்கவாசல் என்ற படத்தை இயக்கி வருகிறார்.


அயோத்தி படத்தால் வருத்தம்:


இந்த நிலையில், ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “ எனக்கு ஒரே ஒரு வருத்தம் உள்ளது. சமீபத்தில் அயோத்தி படம் பார்த்தேன். அந்த படம் எனக்கு வந்தது. அந்த படம் நான் பண்ணவில்லை. சில காரணங்களால் அந்த படம் என்னால் பண்ண முடியவில்லை. மொத்த திரை வாழ்விலும் ஒரு வருத்தம் இருக்கிறது என்றால் அயோத்தி படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஆஹா. என்னமா இந்த படம் இருந்தது. அந்த படம் நான் மிஸ் பண்ணிவிட்டேன். மற்ற எதுவும் எனக்கு வருத்தம் இல்லை.”  


இவ்வாறு அவர் கூறினார்.






அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் உருவாகி சசிகுமார், பாலிவுட் நடிகர் யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி, விஜய் டிவி புகழ், அஞ்சு அஸ்ரானி, மாஸ்டர் அத்வைத் வினோத் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றது.


சசிகுமாருக்கு திருப்பம் தந்த அயோத்தி:


மத நல்லிணக்கத்தை மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருந்ததற்காக இந்த படத்தை பலரும் பாராட்டியிருந்தனர். மதன் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருந்த இந்த படத்திற்கு சான் லோகேஷ் எடிட் செய்திருந்தார். என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்திருந்தார்.


தொடர்ந்து சறுக்கலைச் சந்தித்து வந்த சசிகுமாருக்கு அயோத்தி படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. வட இந்தியாவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை வரும் குடும்பத்தினர் சந்திக்கும் நெருக்கடியும், அந்த நெருக்கடியின்போது சசிகுமார் அவர்களுக்கு செய்யும் உதவியையும் மிகவும் யதார்த்தமாக, ரசிகர்களுக்கு இணக்கமாக இயக்குனர் காட்சிப்படுத்தியிருந்தார். படத்தில்  நடித்த யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானியின் நடிப்பிற்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.