தஞ்சாவூர்: எப்படி எல்லாம் யோசித்து கடத்துறாங்க... அட ஆமாங்க. 330 கிலோ கஞ்சாவை லாரியில் டூல்ஸ் பாக்ஸ் போல் செட் அப் செய்து அதில் வைத்து மாநிலம் விட்டு மாநிலம் கடத்தி வந்து இலங்கைக்கு படகு மூலம் கொண்டு செல்ல இருந்தவர்கள் தஞ்சாவூர் போலீசாரின் கிடுக்கிப்பிடியில் சிக்கிக் கொண்ட சம்பவத்தில் நடந்தது என்ன என்று பார்ப்போம்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் கடல் பகுதி வழியாக, படகு மூலம் கஞ்சாவை இலங்கைக்கு கடத்துவதற்காக திட்டமிட்டு, ஆந்திராவில் இருந்து ஒரு கும்பல் லாரி மூலம் கொண்டு வர உள்ளது என்று தஞ்சாவூர் எஸ்.பி., ஆஷிஷ் ராவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பிறகென்ன உத்தரவுகள் பறக்க அலார்ட் ஆன போலீசார் துரித நடவடிக்கையில் இறங்கினர். இதையடுத்து சப்– இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று இரவு முதல் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியில் முகாமிட்டனர். வாகனங்கள் சோதனை தீவிரமாக, மிகவும் நுணுக்கமாக நடந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை, பேராவூரணி அருகே முடச்சிக்காடு பகுதியில் போலீசார் ரோந்து சென்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள பாலத்தில் சந்தேகப்படும் வெகு நேரமாக நின்றிருந்த லாரியில் இருந்து பெரிய பெரிய பார்சல்களை மூன்று பேர் காரில் ஏற்றிக்கொண்டு இருந்ததை போலீசார் பார்த்தனர்.
இதனால் சந்தேகம் அதிகரிக்க உடன் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் கார் மற்றும் லாரியை சோதனை செய்ததில், சுமார் 330 கிலோ அளவிலான கஞ்சாவை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, போலீசார் லாரி டிரைவரான தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதுார் ஊத்துமலையை சேர்ந்த பெரமராஜ் (34), பேராவூரணி அருகே காரங்குடா பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (44) அம்மணிசத்திரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா (60) ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளனர். பின்னர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
இதில் தஞ்சாவூர் விளார் ரோடு பகுதியைச் சேர்ந்த கருப்பையா (52) என்பவர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே அனகப்பள்ளி பகுதியில் கஞ்சாவை வாங்கி, கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது நண்பரான அண்ணாதுரை(44) என்பவருக்கு சொந்தமான படகு மூலமாக இலங்கைக்கு கஞ்சாவை கடத்த ஏற்பாடுகளும் செய்து விட்டார். பின்னர் ஆந்திராவில் இருந்து லாரியில் கொண்டு வரும் கஞ்சாவை பாதுகாப்பாக வைக்க, அண்ணாதுரை தனக்கு தெரிந்த முத்தையா என்பவரின் உதவியை நாடி உள்ளார். அப்போது முத்தையா தனக்கு தெரிந்த தென்னை தோப்பில் கஞ்சாவை மறைத்து வைத்து பின்னர் அங்கிருந்து எளிதாக எடுத்து சென்று விடலாம் என திட்டம் தீட்டி கொடுத்துள்ளார்.
இதையடுத்து, லாரி டிரைவர் பெரமராஜ் என்பவர் மூலம், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை லாரி அடிப்பகுதியில் டூல்ஸ் பாக்ஸ் என்பது போல ஒரு பெட்டியை உருவாக்கி, அதில் பதுக்கி வைத்துக்கொண்டு ஆந்திராவில் இருந்து கொண்டு வந்துள்ளனர். லாரிக்கு முன்னதாக சொகுசு கார் வழிகாட்டியாக வந்துள்ளது.
மாநிலம் விட்டு மாநிலம் வருவதால் சந்தேகம் ஏற்படாமல் இருக்கவும், சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும் ஆந்திராவில் இருந்து தமிழக எல்லைக்கு வருவதற்காக லாரிக்கு கர்நாடக பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டை பயன்படுத்தியுள்ளனர். பிறகு, தமிழக எல்லையில் இருந்து சென்னை, விழுப்புரம் பகுதி வரை சென்னை பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டை பயன்படுத்தியுள்ளனர். திருச்சி,தஞ்சாவூர் பகுதிக்கு வரும் போது, லாரியின் உண்மையான பதிவெண் நம்பர் பிளேட்டை பயன்படுத்தி பேராவூரணி வரை வந்துள்ளனர் என்ற அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து, தஞ்சாவூர் எஸ்.பி., ஆஷிஷ் ராவத், ஒரத்தநாடு ஏ.எஸ்.பி., ஷனாஸ் இலியாஸ், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., ரவிச்சந்திரன், பேராவூரணி இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் பல பணி நேரம் விசாரணைக்கு பிறகு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இலங்கைக்கு கஞ்சாவை கடத்துவதற்காக, இருந்த அண்ணாதுரைக்கு சொந்தமான மூன்று படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்கு முக்கிய நபரான கருப்பையா லாரி சிக்கியதால் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது போலீசார் கருப்பையாவை தேடி வருகின்றர். அவர் சிக்கினால் கஞ்சாவின் அஸ்திவாரம் எங்கிருந்து புறப்படுகிறது என்று தெரிந்து விடும்.