இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ரித்துராஜ் சிங்(Actor Rituraj Singh) மாரடைப்பால் காலமான செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


சமீபகாலமாக திரையுலகினர் பலர் தொடர்ச்சியாக மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதால் உடல்நிலையில் அக்கறையின்மையே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் பல்வேறு பாதிப்புகளோடு உயிரிழப்பு வரை அதன் தாக்கம் நீள்வது சோகத்தை ஏற்படுத்துகிறது. இப்படியான நிலையில் இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ரித்துராஜ் சிங் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். 


59 வயதான இவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே கணைய அழற்சி பாதிப்பு காரணமாக சில நாட்கள் முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரித்துராஜ் சிங். தொடர் சிகிச்சையில் இருந்த அவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தி பாலிவுட் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


அஜித் படத்தில் நடித்தவர்


ரித்துராஜ் தமிழில் அஜித்குமார் படத்தில் நடித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த துணிவு படம் வெளியானது. இந்த படத்தில் மெயின் வில்லனாக ஜான் ஹொக்கைன் நடித்திருப்பார். வங்கி கொள்ளையை மையப்படுத்திய இந்த படத்தில் ஜானுடன் இணைந்து பணத்தை திருடும் 3 பேரில் இவரும் ஒருவராவார். இவரை இப்படத்தில் அடித்து துவைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.






அதுமட்டுமல்லாமல் ரித்துராஜ் சிங், வருண் தவான் நடிப்பில் வெளியான பத்ரிநாத் கி துல்ஹனியா படத்தில் அவரின் அப்பாவாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ஜான் ஆபிரகாம் நடித்த சத்யமேவ ஜெயதே, யாரியான் 2 உள்ளிட்ட பாலிவுட் படங்களிலும் நடித்திருப்பார். மேலும் ஹே பிரபு, கிரிமினல் ஜஸ்டிஸ், அபய், நெவர் கிஸ் யுவர் பெஸ்ட் ஃபிரெண்ட் மற்றும் மேட் இன் ஹெவன் உள்ளிட்ட ஏகப்பட்ட வெப்சீரிஸ்களிலும், சில சீரியல்களிலும்  ரித்துராஜ் சிங் பிரபலமானார். 


ஏற்கனவே சில தினங்களுக்கு முன் நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பரான வெற்றி துரைசாமி கார் விபத்தில் காலமானார். அதனைத் தொடர்ந்து அஜித்தின் படங்களில் நடித்த ரித்துராஜ் சிங் உயிரிழந்திருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: நடிகைகள் குறித்து சர்ச்சை பேச்சு.. சிக்கிய முன்னாள் அதிமுக பிரபலம் - கடுப்பான திரையுலகினர்!