தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் பழமைமாறாமல் புதுப்பிக்கப்படும். செங்கிப்பட்டியில் தொழிற்மையம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு தஞ்சை மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.


இந்தியாவின் கட்டிடக்கலைஞர்கள் உலக புகழ்பெற்றவர்கள். அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் இன்றும் நம்மவர்களின் திறமைக்கு எடுத்துக்காட்டாக பிரமாண்டமாக, வலுவாக நிலைத்து நிற்கிறது. அதிலும் தமிழகத்தில் கோயில்கள், மாட மாளிகைகள், அரண்மனைகள், சத்திரங்கள் என்று திரும்பும் இடமெல்லாம் வரலாற்று பொக்கிஷங்கள்தான். அண்ணாந்து பார்க்க வைக்கும், அதிசயப்பட வைக்கும் வகையில் நுணுக்கமான கலைத்திறனோடு வடிவமைக்கப்பட்ட அந்த கால கட்டிடங்கள் நம்மவர்கள் ஜாம்பவான்கள் என்று நிரூபிக்கின்றன.


கருங்கல்லா... காரையும், சுண்ணாம்புமா, செங்கல் வைத்து கட்டணுமா என அனைத்திலும் கைவண்ணத்தை காட்டி கலையம்சத்தோடு கட்டியிருக்காங்க. அப்படி அம்சமாக கட்டப்பட்ட ஒன்றுதான் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள மிகவும் பழமையான முத்தம்மாள் சத்திரம்.




 
தஞ்சாவூரை மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்த கிபி.1743 முதல் 1837 வரை கட்டிடக்கலைக்கு தகுந்த மரியாதை அளித்துள்ளனர். கட்டிட வல்லுனர்களின் திறமைகளை வெளி கொணர்ந்துள்ளனர். பெரிய, சிறிய சத்திரங்களை தஞ்சாவூர் முதல் தனுஷ்கோடி வரை அமைத்துள்ளனர் என்றால் பார்த்துக்கோங்க.


அப்படி கட்டப்பட்ட சத்திரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எதுன்னு தெரிஞ்சுக்குவோம். தஞ்சாவூரில் காஞ்சி வீடு சத்திரம், சிரேயஸ் சத்திரம், சூரக்கோட்டையில் சைதாம்பாள்புரம் சத்திரம், ராசகுமரபாயி சத்திரம், ஒரத்தநாட்டில் முத்தம்மாள் சத்திரம், பட்டுக்கோட்டை காசங்குளச் சத்திரம், மணமேல்குடி திரௌபதாம்பாள்புரம் சத்திரம், மீமிசலில் ராசகுமாரம்பாள் சத்திரம், ராமேசுவரத்தில் ராமேசுவரம் சத்திரம். தனுஷ்கோடியில் சேதுக்கரை சத்திரம் என தஞ்சை- தனுஷ்கோடி வரை 20 சத்திரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.


இதில் ஒரத்தநாட்டில் உள்ள முத்தம்மாள் சத்திரம் முத்தம்மாள் என்பவரின் நினைவாக 1800-ல் இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டதாம். யாருங்க அந்த முத்தம்மாள் என்கிறீர்களா. இரண்டாம் சரபோஜி மன்னரின் முதல் மனைவியான முத்தம்மாள் சிறு வயதிலேயே இறந்துவிட்டார் அவர் இறப்பதற்கு முன்பு சத்திரம் ஒன்றை அமைக்கும்படி மன்னரிடம் வேண்டிக்கொண்டார். அவருடைய நினைவாக 1800-ல் இரண்டாம் சரபோஜி மன்னரால் இந்த முத்தம்மாள் சத்திரம் கட்டப்பட்டது என இங்குள்ள மராட்டிய கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதுதாங்க இந்த சத்திரத்தோட பின்னணி. அதாவது ஆக்ராவில் எப்படி ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டினாரோ... அதே போல ஒரத்தநாட்டில் கட்டப்பட்டது இந்த முத்தம்மாள் சத்திரம் என்று தங்களின் ஊர் பெருமையை உரக்க சொல்கின்றனர் ஒரத்தநாடு மக்கள்.


யாத்திரை செல்லும் வழியில் யாத்ரீகர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் தேவையான உணவு, உறைவிடத்துடன் கூடியதாக இந்தச் சத்திரம் இருந்துள்ளது. அழகிய தோரண அமைப்புடைய யானை, குதிரை பூட்டிய தேர் சக்கர வாயில் பகுதியும்,  தூண்கள் தாங்கி நிற்கும் பெரிய முற்றங்களும், ஆங்காங்கே சிவலிங்கமும், மேல்தளத்தில் அழகிய வேலைப்பாட்டுடன் மரத்தால் அமைக்கப்பட்ட தூண்களும், நீர் நிறைந்த கிணறும் மாறாத பழமையை நமக்கு பறைசாற்றுகின்றன.


சத்திரமாகவும் பின்னர் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் பள்ளிக்கூடமாகவும் தொடர்ந்து விடுதி மாணவர்கள் தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பொக்கிஷங்கள் எப்போதும் நமக்கு ஆச்சரியத்தை அளிப்பதைதானே. அதுபோல்தான் கட்டிடக்கலையின் பொக்கிஷங்களான நம் முன்னோர்கள் கட்டிய பழமையான கட்டிடங்கள் நம்ம ஊருக்கு தனி ஸ்பெஷல்தானே. வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் ஒரத்தநாடு வழியே செல்லும் போது நம்ம ஊரு தாஜ்மஹாலாம் முத்தம்மாள் சத்திரத்தையும் விசிட் அடித்துவிட்டு செல்கின்றனர். இத்தகைய கட்டிட கலையில் சிறப்பு வாய்ந்த முத்தமாள் சத்திரம்தான் புதுப்பொலிவு பெற உள்ளது... அப்படியே பழமை மாறாமல் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதேபோல் செங்கிப்பட்டியில் தொழிற்மையம்  அமைக்கப்பட உள்ள அறிவிப்பும் அதனால் கிடைக்க உள்ள வேலைவாய்ப்பும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. டெல்டா மாவட்டமான தஞ்சை செங்கிப்பட்டியில் அமைய உள்ள தொழிற் மையத்தில் வேளாண் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.