ரவி தேஜா


தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் ரவிதேஜா. சினிமாவில் பெரிய அளவிலான குடும்ப பின்னணி இல்லாமல் தொடர்ச்சியான உழைப்பால் சினிமாவில் இன்று தனக்கென மிகப்பெரிய ரசிகர்ளை சேர்த்துள்ள  நடிகர் ரவிதேஜா. ரவிதேஜா தற்போது நடித்திருக்கும் திரைப்படம் டைகர் நாகேஷ்வர ராவ், ரவிதேஜா , நுபுர் சனோன், க்ரித்தி ச்னோன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.


வம்சி கிருஷ்ணா நாயுடு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வருகின்ற அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி இந்தப் படம் திரையில் வெளியாக இருக்கிறது. தற்போது டைகர் நாகேஷ்வர ராவ் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் நடிகர் ரவிதேஜா. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் விஜய் பிரபாஸ் மற்றும் ராம் சரண் கே.ஜி.எஃப் படத்தின் நடிகர் யஷ் ஆகிய நடிகர்களிடம் தான் என்ன எடுத்துக்கொள்வார் என்கிற கேள்விக்கு பதில் சொன்னார் ரவிதேஜா.


விஜய்யிடம் நடனமாடும் திறன்


 நடிகர் ராம் சரண் நடனமாடுவது தனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றும், நடிகர் பிரபாஸின் உடலமைப்பு தனக்கு பிடிக்கும் என்றும் ரவி தேஜா கூறினார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் நடனம் தனக்கு பிடிக்கும் என்றும் விஜய்யின் நடனம் ஆடும் திறமையை முடிந்தால் தான் திருடிக்கொள்வேன் என்றும் அவர் சொன்னார். இதனைத் தொடர்ந்து கே.ஜி.எஃப் நடிகர் யஷ்ஷின் பெயரைக் குறிப்பிட்டு ரவிதேஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு கே.ஜி.எஃப் மாதிரியான ஒரு படம் கிடைத்தது யஷ்ஷின் அதிர்ஷ்டம் தான் என்று ரவிதேஜா பதிலளித்தார்.


கொந்தளித்த ரசிகர்கள்


கே.ஜி.எஃப் முதல் மற்றும் இரண்டாவது பாகத்தின் மூலம் தென் இந்திய ரசிகர்கள் மட்டுமில்லாமல் இந்தி திரைப்பட ரசிகர்களிடமும் மிகப் புகழ்பெற்ற நடிகராக மாறினார் நடிகர் யஷ். எந்த விதமான சினிமா பின்புலமும் இல்லாமல் குறைந்த காலத்தில் புகழ்பெற்ற நடிகராக யஷ் மாறியுள்ளார். இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களாலும்  பாராட்டப்படும் ஒருவராக இருக்கிறார் நடிகர் யஷ். இதே மாதிரியான பின்னணியில் இருந்து வந்த ரவிதேஜா தன்னைப் போல் சினிமாவில் கஷ்டப்பட்டு வந்த ஒரு நடிகரை வெறும் அதிர்ஷ்டசாலி என்று சொல்வது அந்த நடிகரின் உழைப்பை உதாசீனப்படுத்துவதாக இருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். இதன் காரணத்தினால் இணையதளத்தில் நடிகர் ரவிதேஜாவின் கருத்திற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.


ஷாஹித் கபூர்






தங்களது கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில்  நடிகர் யஷ் குறித்து பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் பேசிய வீடியோ ஒன்றும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் “தற்சமயம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய நடிகர் யார்?” என்கிற கேள்விக்கு ராக்கி பாய் என்று ஷாஹித் பதிலளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.