நீலகிரி மாவட்டத்தில் முதியோர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருணா கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மேல்கூடலூர் பகுதியில் உள்ள இராமகிருஷ்ணா முதியோர் இல்லத்தில் முதியோர் தின விழாவை முன்னிட்டு நூறு வயது கடந்த முதியவர்களுக்கு கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு பெற்ற மகன் மற்றும் மகள்களால் கைவிடப்பட்ட தாய் மற்றும் தந்தையர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கலந்து கொண்டார். அப்போது நூறு வயது கடந்த முதியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவப்படுத்திய ஆட்சியர் அருணா, அவர்களுக்கு கம்பளிகள் வழங்கினார். மேலும் அங்கு இருந்த முதியோர்களுடன் அவர் உரையாடினார். பின்பு மாவட்ட ஆட்சியர் அருணாவிற்கு நூறு வயது கடந்த முதியவர் ஆசி வழங்கினார்.




பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதியோர்கள் அனைவரும் "ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். ஆனா அம்மாவை வாங்க முடியுமா" என்ற திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடினர். அப்போது திடீரென நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா அழுதார். நீண்ட நேரம் முதியோர்கள் ஆடியதைக் கண்ட ஆட்சியர் அருணா தன் அழுகையை நிறுத்தாமல் கண்ணீர் வடித்தார். இதைக் கண்ட அருகில் இருந்த அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் அருணாவை ”அழாதிங்க மேடம்” என சமாதானம் செய்தனர். முதியோர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீலகிரி ஆட்சியர் அழுத காட்சிகள் மற்றவர்கள் கண்ணிலும் கண்ணீரை வரவழைத்தது. மூதாட்டிகள் நடனமாடிய போது ஆட்சியர் அருணா கண் கலங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.