தன்னுடைய பெயரில் போலி இன்ஸ்டாகிராம் ஐடி தொடங்கி பணம் கேட்டு ஏமாற்றும் அடையாளம் தெரியாத நபர் மீது இயக்குனரும் நடிகருமான ரவி மரியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


ரவி மரியா பெயரில் போலி கணக்கு


மாயாண்டி குடும்பத்தார், மனம் கொத்திப் பறவை, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட தமிழ் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்த்தவர் நடிகர் ரவி மரியா.


இயக்குனரும் நடிகருமான ரவி மரியா, 2003ஆம் ஆண்டு நடிகர் ஜீவா ஹீரோவாக அறிமுகமான  ‘ஆசை ஆசையாய்’ எனும் படத்தை இயக்கியிருந்தார்.


நடிகர், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ரவி மரியா அவரது பாணியிலேயே இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரத் தொடங்கினார்.


நியூ படத்தில் முதலில் நடிக்கத் தொடங்கிய ரவி மரியா அதன் பின் அன்பே ஆருயிரே, வெயில் என தன் நடிப்புப் பயணத்தைத் தொடர்ந்தார். அதன் பின், தொடர்ந்து பல்வேறு படங்களிலும் நடித்து வரும் ரவி மரியா தமிழில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


பணம் கேட்ட போலி இன்ஸ்டா கணக்கு


இந்நிலையில் முன்னதாக இவரது பெயரில் இன்ஸ்டாகிராமில் தொடங்கப்பட்ட ஃபேக் ஐடியிலிருந்து பணம் கேட்டு பலருக்கும் கோரிக்கைகள் வந்ததாகப் புகார்கள் எழுந்த நிலையில், இது குறித்து தன் இன்ஸ்டா பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளார். மேலும் தன் பெயரில் இயங்கும் இந்த போலி ஐடி குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்திருந்த ரவி மரியா இது குறித்து வீடியோ ஒன்றும் பகிர்ந்துள்ளார்.


அதில், “என்னுடைய  பெயரில் போலியாக இன்ஸ்டாகிராம் ஐடி திறந்து அதனைப் பயன்படுத்தி பலரிடம் நான் பேசுவது போலவே பேசி பணம் கேட்டு வருகிறார்கள். அவர்களை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்பதற்காக இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளேன். அதற்காக நம் காவல் இணை ஆணையர் அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளேன். தயவு செய்து என் போலி இன்ஸ்டாகிராம் ஐடியைப் பயன்படுத்தி யாரும் பணம் கேட்டால் அனுப்பிவிடாதீர்கள்” எனப் பேசியுள்ளார். 


ரவி மரியாவின் இந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.


சர்ச்சையில் சிக்கிய நடிகர் மாரிமுத்து


இதேபோல் முன்னதாக தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்துவின் பெயரில் பதிவிடப்பட்ட கருத்து இணையத்தில் சர்ச்சைக்குள்ளானது.


நடிகர் பிரசன்னா நடித்த ‘கண்ணும் கண்ணும்’ உள்பட பல படங்களை இயக்கியுள்ள மாரிமுத்து, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி சின்னத்திரை, பெரியதிரை என வலம் வந்து கொண்டிருக்கிறார்.


பரியேறும் பெருமாள், கொம்பன் உள்ளிட்ட பல படங்களிலும், சன்டிவியின் எதிர் நீச்சல் சீரியல் என மாறி மாறி நடித்து கவனமீர்த்துள்ள மாரிமுத்துவில் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில் இருந்து, முன்னதாக ஆபாச புகைப்படம் ஒன்றில் கமெண்ட் செய்யப்பட்டது இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பி கேலிக்குள்ளானது.


can I call you எனக் குறிப்பிட்டு பகிரப்பட்ட பெண்ணின் புகைப்படம் ஒன்றுக்கு எஸ் எனக் குறிப்பிடப்பட்டு மாரிமுத்துவின் பெயர் கொண்ட கணக்கில் இருந்து அவரது எண்ணும் பகிரப்பட்டிருந்தது. 


இந்நிலையில், இந்த நம்பர் மாரிமுத்துவின் உண்மை நம்பர் தான் இது எனத் தெரிய வந்ததை அடுத்து இச்சம்பவம் பேசுபொருளானது. இந்நிலையில் முன்னதாக இந்த ஐடி மாரிமுத்துவின் ஐடி அல்ல என்றும், யாரோ அவரது பெயரையும் நம்பரையும் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவரது மகன் விளக்கமளித்ததை அடுத்து இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.