நடிகை த்ரிஷா குறித்து அதிமுக நிர்வாகி ஏ.வி ராஜூ அவதூறாக பேசியது குறித்து நடிகர் ரஞ்சித் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
த்ரிஷா குறித்து அவதூறு
கடந்த வாரம் முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜூ என்பவர் நடிகை திரிஷா குறித்து மிகவும் அருவருக்கத்தக்க மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டினை ஊடகங்களில் தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக, பரவவே பல்வேறு திரைக் கலைஞர்களையும் கொதிப்படையச் செய்தது. இது தொடர்பாக நடிகர் சங்கம் கண்டனங்களைத் தெரிவித்தது. நடிகை திரிஷா சம்பந்தப்பட்ட அதிமுக நிர்வாகிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது மட்டும் இல்லாமல், அவதூறு வழக்கையும் தொடுத்தார்.
தன்னை பற்றிய அவதூறு தகவல்களுக்கு 24 மணி நேரத்துக்குள் பிரபல ஊடக நிறுவனங்கள் வாயிலாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஏ.வி.ராஜூ வீடியோ எந்தந்த தளங்களில் வெளியானதோ அதனை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அதில் ஒரு குறிப்பிட்ட ஒரு தொகை மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 4 நாட்களுக்குள் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். இல்லாவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என த்ரிஷாவின் வழக்கறிஞர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திரிஷா விவகாரம் தொடர்பாக நடிகர் ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.
ரொம்ப அருவருக்கத்தக்கது
நேற்று நடிகர் ரஞ்சித் பத்திரிகையாளர்களை சந்தித்த போது நடிகை த்ரிஷா விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியபோது “ இந்த விவகாரத்தில் சம்பந்தப் பட்ட இரு தரப்பினரும் எனக்கு நேரடியான பழக்க உடையவர்கள் கிடையாது. இருந்தாலும் என்னுடைய சில கருத்துக்களை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். நாகரிகம் என்பது ஒரு நடிகைக்கு மட்டுமானது இல்லை. நாகரிகம் என்பது எல்லா மனிதர்களுக்கு அடிப்படையானது. எல்லாரும் ஒரு வேலை செய்வது மாதிரி அது ஒரு வேலை. இதில் ஊதியத்தில் வேண்டுமானால் பெரியது, சிறியது என்று இருக்கலாம்.
மற்றபடி மானம் மரியாதை என்பது எல்லாருக்கும் சமமானது தான். பொதுவாகவே சினிமாக்காரர்கள் என்றால் கூத்தாடிகள் என்கிற பெயர் சமூகத்தில் இருக்கிறது. ஏ.வி ராஜூ பேசிய வீடியோவை நான் பார்த்தேன். அவர் அப்படி பேசியிருக்க தேவையில்லை. சினிமாக்காரர் என்பதால் மட்டுமே அவர்மேல் இப்படி ஒரு அவதூறை பேசுவது ரொம்பவும் அருவருக்கத்தக்கதாக நான் பார்க்கிறேன்.
கூவத்தூர் பற்றி ஏவி ராஜு பேசுவதை பார்க்கும் போது அது இன்றைய சூழலில் அரசியல் மீது பெரிய ஒவ்வாமை ஏற்படுகிறது. இளையத் தலைமுறைகளுக்கு அரசியல் என்றாலே சாக்கடை என்கிற ஒரு எண்ணத்தை கொண்டு வருகிறது. இதனால் இப்படியான பேச்சை பொது இடங்களில் பேசுவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் “ என்று நடிகர் ரஞ்சித் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : Manjummel Boys Review: குணா குகையில் நடந்த உண்மை சம்பவம்.. மஞ்சும்மல் பாய்ஸ் பட விமர்சனம்!