Manjummel Boys Review: செளபின் சாஹிர் மற்றும் ஸ்ரீநாத் பாஸி மற்றும் பலர் நடித்து மலையாளத்தில் வெளியாகியுள்ள மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் விமர்சனம்.


மஞ்சும்மல் பாய்ஸ்




சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் மஞ்சும்மல் பாய்ஸ். செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கொச்சியில் மஞ்சும்மல் என்கிற ஊரைச்  சேர்ந்த ஒரு நண்பர்கள் குழுவுக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரியளவில் வரவேற்பைப் பெற்று வரும் இப்படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்.


குணா குகை




கமல்ஹாசன் நடித்த குணா படம் கொடைக்கானலில் உள்ள மலைக்குகை ஒன்றில் எடுக்கப் பட்டது என்பது பெரும்பாலானவர்கள் அறிந்த தகவல். ஆங்கிலேயர்கள் மத்தியில் இந்த குகை தொடர்பாக பல்வேறு அமானுஷ்ய கதைகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இதனால்  இந்த குகைக்கு அவர்கள் வைத்த பெயர் டெவில்ஸ் கிச்சன் (Devils Kitchen). ஆனால் இன்று குணா படத்திற்குப் பிறகு இந்த இடம் குணா குகை என்றே அழைக்கப்படுகிறது.  ‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல” என்று கமல்ஹாசன் பேசிய வசனம் இந்த குகையை காதலர்களின் சின்னங்களில் ஒன்றாகவே மாற்றியிருக்கிறது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை சுருக்கமாக விவரிக்க வேண்டும் என்றால் காதலுக்கு சின்னமாக இருக்கும் இந்த குகையை அது நட்பின் சின்னமாக மாற்றுகிறது என்று சொல்லலாம்.


மஞ்சும்மல் பாய்ஸ் கதை




ஏற்கனவே சொன்னது போல் 2006 ஆம் ஆண்டு கொச்சி மஞ்சும்மலில் இருந்து கொடைக்கானல் குணா குகைக்கு சுற்றுலா சென்ற ஒரு நண்பர்கள் குழுவின் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சொந்த ஊரில் சிறிய வயதில் இருந்து ஒன்றாய் விளையாடி , ஆற்றில் சேர்ந்து குதித்து வளர்ந்தவர்கள் இந்த நண்பர்கள். ஆளுக்கொரு வேலையை செய்துகொண்டு மாலையில் வேலை முடிந்ததும் பொதுவான ஒரு இடத்தில் கூடி அரட்டையடிப்பது தான் இவர்களின் பொழுபோக்கு. நன்றாக குடிப்பது, கல்யாண வீடுகளில் சாப்பிடுவது, சண்டை வளர்ப்பது என்று நாட்களை கடத்தும் இவர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செல்கிறார்கள். கொண்டாட்டமாக செல்லும் இந்த சுற்றுலாவில் எதிர்பாராத விதமாக அசம்பாவிதம் ஒன்று ஏற்படுகிறது. சுபாஷ்(ஸ்ரீநாத் பாஸி) என்கிறவன் பல நூறு அடி ஆழமுள்ள குழிக்குள் விழுந்துவிட இந்த ஒட்டுமொத்த பயணமும் ஒரு மோசமான கனவாக மாறிவிடுகிறது. குழியில் விழுந்த சுபாஷை அவனது நண்பர்கள் மீட்க போராடுவதே மஞ்சும்மல் பாய்ஸ்  படத்தின்  கதை.





சர்வைவல் டிராமாவாக உருவாகி இருக்கும் இப்படத்தின் சாதகமான அம்சம் என்றால் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக விஷயங்களை ஒளித்து வைத்து பார்வையாளர்களை குழப்பியடிக்க இயக்குநர் முயற்சிக்கவில்லை. தொடக்கத்தில் இருந்தே ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்பதை பார்வையாளராக நாம் உணர்ந்தாலும் யாரும் எதிர்பார்க்காத ஒரு தருணங்களில் முக்கியமான திருப்பங்களை வைத்து நம்மை திடுக்கிட வைக்கிறார்கள்.


ஒவ்வொரு கதை திருப்பத்திலும் மிகையில்லாமல் காட்சிகள் கோர்க்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக படத்தின் கடைசி அரை மணி நேரம் நம்மை இருக்கையில் கட்டிபோட்டு வைத்தது போலான அனுபவமாக இருக்கிறது. மிக சாதாரணமான மனிதர்கள் தங்களது நண்பனை காப்பாற்றும் முயற்சியில் எப்படி வரலாற்றின் ஒரு அங்கமாக மாறிவிடுகிறார்கள் என்பதை படம் அடிகோடிட்டு காட்டுகிறது.

பல்வேறு கதாபாத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இதில் ஸ்ரீநாத் பாசி , செளபின் சாஹிர், ஜார்ஜ் மரியம் ஆகியவர்களின் கதாபாத்திரம் முக்கிய கவனம் பெறுகின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு தனித்தனியான அறிமுகம் கொடுக்காமல் ஒரு 11 பேர்கொண்ட நண்பர்கள் என்று குழுவாக அடையாளப்படுத்தி இருப்பது ஒரு வகையில் இயக்குநரின் நல்ல முடிவுகளில் ஒன்று. அவரவருக்கான காட்சியில் மிக இயல்பாக நடிகர்கள் வெளிப்படுகிறார்கள். குறிப்பாக மரியம் ஜார்ஜ் மற்றும் கலித் ரஹ்மான் ஆகிய இருவருக்கு சிறிய இடங்களில் வந்துபோனாலும் கைதட்டல்களை பெறுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக கமல்ஹாசனின் குணா படத்தில் இடம்பெற்று கண்மணி அன்போடு பாடல் படத்தில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிடுகிறது.

குணா குகையை ஒளிப்பதிவாளர் ஷைஜு கலித் கிட்டதட்ட ஒரு உயிரினமாக காட்ட முயற்சித்திருக்கிறார். அதே நோக்கத்திற்கு இசைவாக பின்னணி இசையும் கைகோர்த்துக் கொள்கிறது. இவை இரண்டும் சேர்ந்து ஒரு விதமான அமானுஷ்யத் தன்மை கதையில் சேர்கின்றன.


விமர்சன ரீதியாக படத்தின் ஓப்பனிங்கும் க்ளைமேக்ஸும் இன்னும் கொஞ்சம் அழுத்தமானதாக இருந்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக படத்தைப் பார்த்தப் பின் இந்த இரண்டு காட்சிகள் அவ்வளவு முக்கியமானவையாக தெரிவதில்லை. மற்றபடி ஒரு நல்ல சர்வைவல் டிராமா பார்க்க நினைப்பவர்கள் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை தாராளமாக பார்க்கலாம்