தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபாசானாவின் வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.


ராம்சரண் மனைவி வளைகாப்பு:


ஆர்.ஆர்.ஆர் படத்தின் மூலம் டோலிவுட் தாண்டி உலக அளவில் பிரபலமடைந்துள்ள நடிகரான ராம் சரண் கடந்த 15 ஆண்டுகளாக நடித்து வருகிறார். 2007ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரணின் கரியரை மகதீரா படம் டாப் கியரில் தூக்கி நிறுத்தியது.


தொடர்ந்து 2012ஆம் ஆண்டு  அப்போலோ மருத்துவமனையின் சேர்மேன் மற்றும் இணை நிறுவனர் மருத்துவர் பிரதாப் சி.ரெட்டியின் பேத்தியுமான தனது சிறு வயது தோழியும்  உபாசனா காமினேனியை ராம்சரண் திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் தம்பதி குழந்தை பெற்றுக் கொள்ளாமல் வலம் வந்தனர். 


பிரபலங்கள் பங்கேற்பு:


இந்நிலையில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் தாங்கள் பெற்றோராகப் போவதாக இந்த ஜோடி அறிவித்தது. இது குறித்து சிரஞ்சீவியும் தன் இன்ஸ்டா பக்கத்தில் ஹனுமன் புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், ஒட்டுமொத்த டோலிவுட் திரையுலகமும் இந்தத் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது. 


இந்நிலையில் நண்பர்கள், குடும்பம் சூழ உபாசனாவுக்கு வளைகாப்பு நடைபெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. மேலும் உபாசானாவின் புகைப்படத்தை நடிகர் அல்லு அர்ஜூன் உள்ளிட்ட பிரபலங்களும் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விழாவில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாடகி கனிகா கபூர் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.






ஏற்கெனவே தன் தங்கைகள் மற்றும் குடும்பம் சூழ தனக்கு நடைபெற்ற மற்றொரு வளைகாப்பு புகைப்படங்களை உபாசனா பகிர்ந்திருந்தார். வரும் ஜூலை மாதம் இவர்களுக்கு குழந்தை பிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று போற்றப்படும் இயக்குநர் ஷங்கரின் அடுத்த படத்தில் தற்போது  ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கும் நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் ராம் சரண் - ஷங்கர் கூட்டணியில் முதன்முறையாக உருவாகும் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.