நடிகர் ராமராஜன் தன்னுடைய வாழ்க்கையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா செய்த மிகப்பெரிய சம்பவங்களை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் 80களின் காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் ராமராஜன். உதவி இயக்குநராக சினிமா பயணத்தை தொடங்கி நடிகராகவும், இயக்குநராகவும் தனது சினிமா வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். ராமராஜன் சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும் மக்கள் அவரை மறக்காமல் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இப்படியான நிலையில் அவர் நீண்ட இடைவெளிக்குப் பின் சாமானியன் என்ற படத்தில் நடித்துள்ளார்.


ராகேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ள நிலையில் நாளை இந்த படம் தியேட்டரில் வெளியாகவுள்ளது. முன்னதாக இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சாமானியன் படம் தொடர்பாக ராமராஜன் பல நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார்.  


அதில் பேசிய அவர் தன்னுடைய வாழ்க்கையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் பற்றி பேசியுள்ளார். அதில் ராமராஜன் - நளினி திருமண புகைப்படம் காட்டப்பட்டது. அவரது திருமணத்தில் எம்ஜிஆர் பங்கேற்றிருக்கும் புகைப்படம் இன்றைக்கும் பலருக்கும் ஆச்சரியமான விஷயம்.


இதுதொடர்பாக நினைவுகளை பகிர்ந்த ராமராஜன், “என்னுடைய திருமணம் வாழ்க்கையில் நடக்காத விஷமாக தான் நினைத்தேன். சென்னை என்பது எங்கே இருக்கு என்று கூட தெரியாது. எல்.ஐ.சி பில்டிங்கை பார்க்க வேண்டும் என நினைத்த எனக்கு திருமணம் என்பது கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத ஒன்றாக மாறியது. ஊரில் எம்ஜிஆர் பொதுக்கூட்டம் நடக்கும் போது நான் அங்கிருக்கும் இருக்கையில் அமர மாட்டேன். அங்கே இருந்தால் தலைவரை தொட முடியாது என நினைத்து அவர் வரும் வழியில் ஓரமாக நிற்பேன். எம்ஜிஆரை தொட்டு போலீஸிடம் அடியெல்லாம் வாங்கிருக்கேன். ஆனால் இன்றைக்கும் அவர் கையுடன் என் கைகோர்த்து இருக்கும் புகைப்படம் இருக்கிறது. இதைவிட வேறு என்ன எனக்கு வேண்டும். ஊரில் எல்லா நடிகர்களின் படங்களும் பார்ப்பேன். ஆனால் எம்ஜிஆர் மேல் ஒரு பற்று இருந்தது.


மிகப்பெரிய மனிதர். என்னை கூப்பிட்டு இந்த தேதியில் திருமணம் வைத்துக்கொள் என சொல்லி வந்து பெருமைப்படுத்திவிட்டு சென்றார். அதேபோல் இரட்டை குழந்தைகள் பிறந்தபோது ஜெயலலிதா மருத்துவமனைக்கு வந்து செயின் போட்டார்கள். அப்படிப்பட்ட இரண்டு நிகழ்வுகளையும் என் வாழ்நாளில் மறக்க முடியாது” என கூறினார்.