நான் நிறைய படங்கள் கதை கேட்டு தான் வருகிறேன். ஆனால் எதுவும் செட் ஆகவில்லை என நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார். 


ராகேஷ் இயக்கத்தில் நடிகர் ராமராஜன் “சாமானியன்” என்ற படத்தில் நடித்துள்ளார். கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடித்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சாமானியன் படம் இன்று (மே 23) தியேட்டரில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. 


இதில் பேசிய ராமராஜன், “நான் நிறைய படங்கள் கதை கேட்டு தான் வருகிறேன். ஆனால் எதுவும் செட் ஆகவில்லை. நடிகன் என்றால் எல்லா கேரக்டர்களும் நடித்து தான் ஆக வேண்டும். ஆனால் அது எப்படி ஒர்க் அவுட் ஆக வேண்டும் என்பதில் தான் உள்ளது. உலகத்துக்கே நடிப்பை கற்றுகொடுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதேபோல் படத்தில் நடித்து தொடர்ந்து 3 முறை தேர்தலில் ஜெயித்தவர் எம்ஜிஆர். என்னுடைய கரகாட்டக்காரன் படத்தை எடுத்துக் கொண்டால் அனைவருக்கும் சிவாஜி நடித்த தில்லானா மோகானாம்பாள் படம் தான் நியாபகம் வரும். அந்த படத்தில் சிவாஜிக்கு பதில் எம்ஜிஆர் நடித்திருந்தால் எப்படி செட்டாகும்? 


ஒருமுறை விநியோகஸ்தர்கள் சிவாஜியிடம் சென்று  எம்ஜிஆர் மாதிரி நடியுங்கள் என்றும், எம்ஜிஆரிடம் சென்று சிவாஜி மாதிரி நடியுங்கள் என்றும் சொல்லியுள்ளார்கள். அப்படியா சரி முயற்சி செய்கிறேன் என இருவரும் ஒரு படம் நடித்தார்கள். எம்ஜிஆர் நடித்த பாசம் படத்தையும், சிவாஜி நடித்த தங்க சுரங்கம் படத்தையும் இயக்கியவர் ராமண்ணா. ஆனால் இரு படங்களும் சரியாக போகவில்லை. இதனைத் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் இருவரிடம் சென்று நீங்கள் நீங்களாகவே நடியுங்கள் என சொல்லியுள்ளார்கள்,


என்ன கேரக்டரில் நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேனோ அதில் தான் ஆரம்பத்தில் இருந்து நடித்து வருகிறேன். நான் சம்பாதிச்சு கார், பங்களா வாங்க வேண்டும் என நினைக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்து கதை மட்டுமே கேட்டு பிடித்தால் மட்டுமே நடிப்பேன்.எந்த படத்துக்கும் நானாக சென்று வாய்ப்பு கேட்கவில்லை. என்னை நடிகராக அறிமுகம் செய்த தயாரிப்பாளர், இயக்குநர் என யாரையும் நான் மறக்க மாட்டேன். 


ராமராஜனின் திரைப்பயணம் சினிமாவில் 4 ஆண்டுகள் தான். 1986ல் அறிமுகமாகி 1990 ஆம் ஆண்டு வரை மட்டுமே பீக்கில் இருந்தேன். ஆனால் இன்றைக்கு வரை மக்கள் மனதில் நிலைத்து நிற்க இசைஞானி இளையராஜா தான் காரணம். என்னை நியாகப்படுத்துவதே அவரின் பாட்டுக்கள் தான்” என தெரிவித்துள்ளார்.