தமிழ் திரையுலகின் கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என பன்முகத் தன்மை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரகுமான். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்து அசத்தியுள்ளார். அபுதாபியில் பிறந்த நடிகர் ரகுமானுக்கு இன்று 57வது பிறந்தநாள் ஆகும்.


மழைத்துளி பாடல் உருவானது எப்படி?


தமிழில் இவர் நடிப்பில் வெளியான ஏராளமான படங்கள் மெகா ஹிட் அடித்திருந்தாலும், நடிகர் ரகுமான் என்றதும் அனைவரது நினைவுக்கும் வருவது அவர் நடித்த சங்கமம் படம். இந்த படத்தில் இடம்பெற்ற மழைத்துளி மழைத்துளி பாடல் இப்போது கேட்டாலும் உடல் சிலிர்க்கும். அப்படி ஒரு பாடல் இது.


இந்த சங்கமம் பாடல் எவ்வாறு படமாக்கப்பட்டது என்பது குறித்து, படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா விளக்கமாக கூறியிருந்தார். அதாவது அவர் தனியார் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தாவது, “கதையிலேயே அந்த காட்சிதான் ரொம்ப முக்கியமான காட்சி. ஊர் ஊராக போய் மணிவண்ணனும், ரகுமானும் தங்களோட கிராமியக் கலையைப் பார்க்க வாங்கனு கேட்கிறாங்க. அதேமாதிரி, நிஜமாகவே நாங்களும் ஒவ்வொரு ஊருக்கும் மக்களை ஷூட்டிங் பார்க்க வரச்சொல்லி தகவல் கொடுத்துட்டோம்.


சவால்கள் என்னென்ன?


ஷூட்டிங் அன்னைக்கு வண்டியில் மக்களை அழைச்சுகிட்டும் வந்தோம். அந்தக் காட்சியில பாதி பேர் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்னா, மீதம் இருந்தவர்கள் பொதுமக்கள்தான். எப்போதுமே இப்படிக் கூட்டம் வந்தா முழு நாளும் இருக்கமாட்டாங்க. 10 மணிக்கு வர்றவங்க 1 மணிக்கெல்லாம் கிளம்பிடுவாங்கனு எங்களுக்கு நல்லாத் தெரியும். இந்த நேரத்துக்குள்ள மொத்தக் கூட்டத்தையும் வெச்சு வைல்டு ஷாட்ஸ் எடுக்கனும். இன்னொரு பக்கம் மேடையில முழுப் பாடலையும் எடுக்கனும்.


இன்னொரு பக்கம், மணிவண்ணன் இறந்துட்டார்னு தெரிஞ்ச பிறகு அப்பாவுக்காக ஆடணும்னு ரகுமான் முடிவெடுக்குற காட்சிகளையும் எடுக்கணும். அதுக்குப் பிறகு அப்பா மணிவண்ணனோட சடலத்தை மக்கள் மத்தியில எடுத்துக்கிட்டு போகுற காட்சிகளையும் எடுக்கணும். இவ்வளவு வேலையையும் வச்சுகிட்டு, முதல் நாளே ஷூட்டிங்கிற்கு பக்கா ப்ளான் பண்ணிட்டோம்.


நாங்க நினைச்ச மாதிரியே காலையில வந்த மக்கள் கூட்டம் மதியம் 2 மணிக்கு பிறகு இல்ல. ஆனா, நாங்க நினைச்சதையெல்லாம் அந்தக் குறைந்த நேரத்திலேயே எடுத்து முடிச்சுட்டோம்.”


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இசை குறித்த படமான சங்கமம் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றியதும், மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்ததும் அந்த கிளைமேக்ஸ் பாடலான மழைத்துளி, மழைத்துளியே ஆகும். இந்த பாடலுக்கு நடிகர் ரகுமான் தனது நடிப்பால் உயிர் கொடுத்து நடிப்புடன், நடனத்தையும் கொடுத்திருப்பார். இந்த படம் திரையரங்கில் நன்றாக ஓடிக் கொண்டிருந்தபோதே தொலைக்காட்சியில் மிக விரைவாகவே ஒளிபரப்பப்பட்டது.