நடிகர் ராமராஜன் நடித்துள்ள சாமானியன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
1986 ஆம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ராமராஜன், தொடர்ந்து எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், எங்க ஊரு காவல்காரன், என்னை பெத்த ராசா உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் நாயகனாக கொண்டாடப்பட்டார். கடைசியாக 2012 ஆம் ஆண்டு மேதை என்ற படத்தில் நடித்த அவர் அதன்பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். ஆனாலும் அவர் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் ராமராஜன் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ளார். சாமானியன் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தை ட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ளார். ராஹேஷ் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் இப்படத்தில் நடிகர்கள் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த 3 சாமானியர்களும் சமூகத்துக்கு என்ன செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
அச்சு ராஜாமணி இசையமைக்கும் நிலையில் அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதற்கிடையில் சாமானியன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.