'வடிவேலு'  30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் மனநிலையை ஒருநிலை படுத்த பயன்பாட்டு வரும் ஒரு மந்திரச்சொல். அவரை புதிதாக நடிக்க விடாமல் அரசியல் செய்து விடலாம் எளிதாக, ஆனால் அந்த அரசியல் வாதிகள் யாரும் அவரது டெம்ப்ளேட்டுகளில் இருந்து தப்பிக்கவோ தடுக்கவோ முடியாது. உடல்மொழி, வார்த்தை ஜாலம் என ரசிகர்களை கட்டிப்போட்ட வடிவேலின் திரை, வழாக்கைப்பயணம் என்பது அவ்வளவு எளிதாக கடந்து செல்லக்கூடிய ஒன்று அல்ல. பள்ளிப்படிப்பு வாசம் அறியாத வடிவேலுவின் உள்ளிருந்த பிறவி கலைஞன் தான் அவரின் வாழ்க்கைக்கான அடித்தளம். நாடக கலையில்  நகைச்சுவை வேடங்களில் நடித்துவந்த வடிவேலுவின் சினிமா தாகத்திற்கு தீனி போட்டவர் நடிகர் ராஜ்கிரண். அவரின் முதல் படம்  என் ராசாவின் மனசிலே, அறிமுகப் படத்திலேயே தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு  தனக்கான முகவரியை உருவாக்கிக் கொண்டார் வடிவேலு.  தமிழ் சினிமாவில் காமெடி என்றால் கவுண்டமணி செந்தில் தான். அவர்களின் நகைச்சுவையில் கட்டுண்டு கிடந்த தமிழ் ரசிகர்களை, அதீத உழைப்பு, அபாரத் திறமையை வெளிபடுத்தி தன் பக்கம் ஈர்த்தவர் வைகைப்புயல் வடிவேலு. அடுத்தடுத்து தனது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி நகைச்சுவை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினார் அவர்.



வடிவேலு திரைத்துறைக்கு வந்த கதையை ராஜ்கிரண் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். வடிவேலு எப்படி உங்களிடம் வாய்ப்பு கேட்டு வந்தார் என்று கேட்ட கேள்விக்கு, "வடிவேலு என்னிடம் வாய்ப்பு கேட்டெல்லாம் வரவில்லை, நான் தயாரிப்பாளராக இருந்த காலத்தில், எனக்கென வியாபார யுக்திகள் இருந்தன. அப்போது தயாரிப்பாளரான எனக்கே ரசிகர் மன்றம் இருந்தது. அதில் ஒரு ரசிகருக்கு மதுரையில் திருமணம், நான் வந்து தாலி எடுத்து கொடுத்தால்தான் கட்டுவேன் என்று கூறிவிட்டான். நானும் ரயில் ஏறி மதுரை சென்றுவிட்டேன், காலை திருமணம் முடிந்து திரும்பவும் ரூமிற்கு வந்துவிட்டேன். மீண்டும் இரவுதான் சென்னைக்கு ரயில். அதுவரைக்கும் மதுரையில் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த ரசிகர் சொன்னார், அவர் பெயர் இளங்கோ. நீங்கள் மாலை வரை இங்கிருந்தால் போர் அடிக்கும், என் நண்பன் ஒருவன் இருக்கிறான், அவனை அனுப்பி வைக்கிறேன், அவன் பேசினால் நேரம் போவது தெரியாது என்று அனுப்பி வைத்தான். அப்போது வந்தவன் தான் வடிவேலு. வந்து மாலை வரை பேசிக்கொண்டிருந்தான், நேரம் போவதே தெரியவில்லை, சிரித்து சிரித்து வயிரெல்லா வலிக்க ஆரம்பித்தது. அன்று முழுவதும் பேசியதில் அவனும் என்னிடம் வாய்ப்பு கேட்கவில்லை, நானும் அவனிடம் அது பற்றி பேசவில்லை, நேரத்தை போக்குவதற்காக மட்டுமே பேசிக்கொண்டிருந்தோம். அப்புறம் ரயில் ஏறி சென்றுவிட்டேன்.



ஷூட்டிங் எல்லாம் நடக்கிறது, அப்போது ராசாவின் மனசிலே திரைப்படம் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது திண்டுக்கல்லில். அப்போது ஒரு சிறிய ரோல் ஒன்று, புதிதாக யாராவது செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. கஸ்தூரி ராஜாவும் தேடுகிறார் நானும் தேடுகிறேன், உடனே மனதிற்கு வருகிறான் அந்த பையன். அப்போதெல்லாம் இன்லாண்டு லெட்டர் அனுப்புவார்கள் ரசிகர்கள், உடனே சென்னை அலுவலகத்திற்கு போன் செய்து இளங்கோ அனுப்பிய லெட்டரை தேட சொன்னேன். இளங்கோ மட்டும் லெட்டரில் பின் புறம் ஒரு சீல் அடித்து வைப்பான், அதில் அவன் பெயரும் போன் நம்பரும் இருக்கும். அதனை தேடி எடுத்து இளங்கோவுக்கு போன் செய்து அந்த பையன் வடிவேலு நாளை காலை 7 மணிக்கு திண்டுக்கல்லில் இருக்க சொல்ல வேண்டும் என்று கூறிவிட்டேன். அதே போல வந்தான், அவனுக்கு ரெண்டே ஸீன் தான், ஒன்னு கிளி ஜோசியர் ஸீன், அதுக்கு அப்புறம் கவுண்டமணி சார் கிட்ட நல்லருக்கீங்களாண்ணேன்னு கேட்டு அடி வாங்குறது. அந்த அடி வாங்குற ஸீன்ல எழுதிருந்த டயலாக் "இப்ப என்னா கேட்டுப்புட்டேன், நல்லாருக்கிங்களான்னு கேட்டது குத்தமா" அவ்வளவுதான். ஆனா கவுண்டமணி கீழ போட்டு மிதிக்கும்போது, 'பாத்துண்ணே படாத இடத்துல பட்ற போவுது' ன்னு அவனே ஒரு டயலாக் பேசுறான். நல்லருக்கே க்ரியேட்டிவா திங்க் பன்றானேன்னு அதுக்கு அப்புறம் அவனுக்காக வச்ச பாட்டுதான் போடா போடா புண்ணாக்கு"