நடிகர் சசிகுமார் நடிப்பில் இயக்குநர் அ.மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியான அயோத்தி படத்தை வாழ்த்தி ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.


ரஜினிகாந்த் ட்வீட்


“அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!” என ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.


மதங்களைத் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்திய படம் எனக் கொண்டாடப்பட்ட ‘அயோத்தி’ திரைப்படம் கடந்த மார்ச் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.


கோலிவுட்டில் ஸ்லோ பிக் அப் ஆன படங்களின் லிஸ்டில் சமீபத்தில் இணைந்த திரைப்படம், அறிமுக இயக்குநர் R. மந்திர மூர்த்தி இயக்கத்தில் இயக்குனர், நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’  திரைப்படம்.


ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா, புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.  இசையமைப்பாளர் NT ரகுநந்தன்  இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருந்தார். 




வரவேற்பைப் பெற்ற கதை


அயோத்தியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வரும் இந்து குடும்பம் எதிர்பாராத சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது, சசிகுமார், புகழ் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் முரண்பாடுகளைக் கடந்து உதவுவதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் பெரிய ஆர்ப்பாட்டங்கள், ப்ரொமோஷன் இல்லாமல் வெளியான அயோத்தி திரைப்படம் சைலண்ட்டாக ஹிட் அடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பாராட்டுகளைப் பெற்று லைக்ஸ் அள்ளியது. 


மதம், மூடநம்பிக்கைகள், ஆண்மைய மனப்பான்மை உள்ளிட்ட பல சமூக பிரச்சினைகளை இந்தக்கதை பேசியதாக பல தரப்பினரும் வாழ்த்தினர்.


ஓடிடி ரிலீஸ்


இந்நிலையில், சென்ற ஏப்ரல் 7ஆம் தேதி zee 5 ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் மீண்டும் இணையத்தில் பேசுபொருளானது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தற்போது அயோத்தி படத்தை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார். 


இந்நிலையில், அயோத்தி படத்தை இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீ-மேக் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்தியில் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாகவும், தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் முன்னதாக வெளியாகின. மேலும்,  இந்த இரண்டு படங்களுக்கும் ‘அயோத்தி யா’ எனப் பெயரிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


கதை சர்ச்சை


ஒருபுறம் அயோத்தி படம் பாராட்டுகளைப் பெற்றாலும், படத்தின் கதை யாருடையது என்பது குறித்த சர்ச்சை முன்னதாக எழுந்தது. அயோத்தி படத்தின் கதை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுடையது எனக்கூறப்பட்ட நிலையில்,  அயோத்தி படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் மாதவராஜ் பதிவிட்டிருந்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


மற்றொரு புறம் படத்தின் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்து இயக்குநர் எஸ். ராமகிருஷ்ணன் தன் இணைய பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  இரண்டு எழுத்தாளர்கள் அயோத்தி படத்தின் கதையை தங்களுடையது என ஃபேஸ்புக்கில் பதிவிட்டது சர்ச்சையைக் கிளப்பியது.