கோலிவுட்டின் உச்ச நட்சத்திரம், இந்திய சினிமாவின் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார் என வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், நேற்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்தார். அப்போது தன்னை விட 21 வயது இளையவரான யோகி ஆதித்யநாத்தின் கால்களில் விழுந்து அவர் ஆசிர்வாதம் பெற்றது இணையத்தில் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.


நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் பட ரிலீசுக்கு முன்பே இமயமலைக்கு தனது ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கினார். ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸான நிலையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி தன் ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கிய ரஜினி, ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை எனத் தொடர்ந்து பயணித்து தற்போது உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து வருகிறார்.


இந்நிலையில் ரஜினிகாந்தின் ஆன்மீகப் பயணம் திடீரென அரசியல் பயணமாக மாறிவிட்டதே என அவரது ரசிகர்கள் கடந்த சில நாள்களாக குழம்பி வந்தனர்.


அதன்படி முன்னதாக உத்தரகாண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் என வரிசையாக பாஜக பிரமுகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், நேற்று காலை உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மௌரியாவுடன் தனது ஜெயிலர் படத்தைப் பார்த்து ரசித்தார்.


தொடர்ந்து நேற்று மாலை உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை ரஜினிகாந்த் சந்தித்த நிலையில், அவரை சந்தித்தபோது ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக அவரது கால்களை தொட்டுக் கும்பிட்டார்.


இந்நிலையில் 72 வயது மிக்க ரஜினிகாந்த் தன்னை விட 21 வயது சிறியவரான யோகி ஆதித்யநாத் கால்களில் விழுந்தது இணையத்தில் கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.


ஜெயிலர் படம் மாபெரும் ஹிட் அடித்த vibeஇல் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக இணையத்தில் வலம் வந்த நிலையில், ரஜினியின் இந்த செயல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


இயக்குநர் பா.ரஞ்சித்தின் காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறுமி ஒருவருக்கு காலில் விழ வேண்டாம், நமஸ்தே போலோ என சொல்லிக் கொடுப்பது போன்றும், காலில் விழும் கலாச்சாரத்தை நடிகர் ரஜினிகாந்த் எதிர்ப்பது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், காலா பட காட்சிகளை வெட்டி ஒட்டி இணையத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் உள்பட பலரும் ரஜினிகாந்தை கடுமையாக ட்ரோல் செய்து





வருகின்றனர்.


 






 







மற்றொருபுறம் யோகி ஆதித்யநாத் ஒரு துறவி, அவர் காலில் விழுவதில் தவறில்லை எனவும் நடிகர் ரஜினிகாந்தின் இந்த செயலுக்கு ஆதரவு தெரிவித்தும் பாஜகவினர் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.