நடிகர் ரஜினிகாந்த் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகாலையில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் ரஜினி தனது 72வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் படத்தில் இடம்பெறும் ரஜினியின் கேரக்டர் அறிமுகப்படுத்தப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

இதைத்தவிர ரஜினியும் தான் கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருந்த ‘பாபா’ படத்தை ரீ-ரிலீஸ் செய்து கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிட்டிருந்தார். மேலும் அவர் நடித்த சிவாஜி படமும் ரீ-ரிலீஸ் ஆனதால் இந்த பிறந்தநாள் ரஜினி ரசிகர்களுக்கு டிரிபிள் ட்ரீட் ஆக அமைந்தது. இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்றார். அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள டி.எஸ் ஆர் விருந்தினர் அறையில் தங்க வைக்கப்பட்டார்.

முன்னதாக காரில் வந்து இறங்கிய ரஜினியுடன் சிலர் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். பின்னர் அவரை தேவஸ்தானம் அதிகாரிகள் லிஃப்ட் வழியாக அழைத்துச் சென்று அறையில் தங்க வைத்தனர். ரஜினியுடன் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் வந்திருந்த நிலையில், இருவரும் அதிகாலை சுப்ரபாத சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதன்பின்னர் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதனையடுத்து கோயிலில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு ஆமாம். நான் வாழ்த்துகளை தெரிவித்திருந்தேன் என கூறினார். மேலும்  6 வருடங்களுக்குப் பின் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தது எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, திவ்ய அனுபவம் என பதிலளித்தார். திருப்பதியில் இருந்த ரஜினி வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.