நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி இரு அவைகளிலும், ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே பல்வேறு விவகாரங்களில் காட்டமான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ரா மக்களவையில் பேசும்போது, சில மேக்ரோ பொருளாதார தரவுகள் தொடர்பாக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். தற்போது உண்மையில் பப்பு யார் எனவும்,  கேள்வி தீயை மூட்டியவர் அல்ல, ஆனால் ”பைத்தியக்காரனுக்கு" தீப்பெட்டிகளை கொடுத்தது யார் என்பதே எனவும் வினவினார்.


நிர்மலா சீதாராமன் காட்டம்:


தொடர்ந்து, 2022-23 ஆம் ஆண்டிற்கான மானியங்களுக்கான துணைக் கோரிக்கைகள் மற்றும் 2019-20 ஆம் ஆண்டிற்கான மானியங்களுக்கான கூடுதல் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்னதாக, மஹுவா மொய்த்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது,  ஜனநாயகத்தில் மக்கள் ஆணையை வழங்குகிறார்கள். இந்த அரசாங்கத்திற்கும் மக்களால் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. மக்களை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றார். மக்களால் தங்களுக்கான வாய்ப்பு கிடைத்தபோது, இலவச சமையல் எரிவாயு, மின் இணைப்புகள், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 ரொக்கம் மற்றும் தூய்மை இந்தியா பரப்புரையை தொடங்கினோம். ஆனால், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி எனும் தீப்பெட்டி கிடைத்த போது, ​​அது பாஜக தொண்டர்களின் வீடுகளுக்கு தீ வைக்கவும், கொள்ளை, பலாத்காரம் மற்றும் தீயிட்டு கொளுத்துவது போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டது எனவும் சாடினார்.






தீப்பெட்டிகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன?


தீப்பெட்டி யாருடைய கைகளில் உள்ளது என்பதைப் பற்றியது அல்ல, ஆனால் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியம். ​​​​மத்திய அரசு மக்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொண்டு வர தீப்பெட்டியை பயன்படுத்துகிறது. அதேசமயம் மேற்குவங்கத்தில் அது தீக்குளிப்புக்கு பயன்படுத்தப்பட்டது என கடுமையாக விமர்சித்தார். சமீபத்தில், குஜராத்தில், பாஜக, அமோக வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பின், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அமைதியான முறையில் ஆட்சிக்கு வந்து, பதவியேற்றது. ஆனால்,  ​​தேர்தலுக்குப் பிந்தைய மேற்கு வங்கத்தில் நடந்த சம்பவங்களை ஒப்பிட்டுப் பாருங்கள் எனவும் வினவினார்.


எங்கே பப்பு?


யார் பப்பு, எங்கே பப்பு என்று ஒரு கேள்வி இருக்கிறது? அவை உறுப்பினர் சற்றே திரும்பிப்பார்த்தால் மேற்கு வங்கத்தில் பப்புவைக் கண்டுபிடிக்க முடியும். சாமானிய மக்களுக்குப் பயனளிக்கும் அற்புதமான திட்டங்கள் இருக்கும்போது, ​​மேற்கு வங்கம் அவற்றை செயல்படுத்தவில்லை.  நீங்கள் பப்புவை வேறு எங்கும் தேடத் தேவையில்லை மேற்கு வங்கத்திலேயே இருக்கிறார் எனவும் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். ( காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, பாஜகவின் பப்பு என விமர்சிப்பது குறிப்பிடத்தக்கது)