கலைஞர் 100 விழாவில் பேசிய ரஜினி, கலைஞர் கருணாநிதியுடனான தனது நினைவுகள் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். 


கலைஞர் 100 விழா


மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதியில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவர் தமிழ் திரையுலகிற்கு ஆற்றிய பெரும் தொண்டை கருத்தில் கொண்டு. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் “கலைஞர் 100” விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, நயன்தாரா, இயக்குநர் வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். 


மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு பாடல், நடனம் என பல கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் கலைஞர் கருணாநிதி உடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 


ரஜினிகாந்த் பேச்சு 


அதாவது, “ எனக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 1974 ஆம் ஆண்டில் இருந்தே தெரியும். அப்போது பொதுக்கூட்டங்களில் கலைஞரோட பையன்னு சொல்லி கூப்பிடுவாங்க. அப்ப அவரிடம் இருந்த அந்த பேச்சு இப்பவும் இருக்கு. கடினமாக உழைத்து  இப்போ முதலமைச்சர் ஆகிருக்காரு” என பாராட்டினார். 


தொடர்ந்து கருணாநிதி பற்றி பேசிய ரஜினி, “சில பேர் அவங்களோட அறிவைக் காமிக்குறதுக்காக பேசுவாங்க. மத்தவங்களுக்கு புரியுதானு யோசிக்க மாட்டாங்க. ஆனா கலைஞர் அறிஞர் சபைல அறிஞராவும் கவிஞர் சபைல கவிஞராவும் பாமரனுக்கு பாமரனாவும் பேசுவாரு. 


எப்பவுமே ஒருத்தருக்கு எழுத்தாற்றல் இருந்தா பேச்சாற்றல் இருக்காது.பேச்சாற்றல் இருந்தால் எழுத்தாற்றல் இருக்காது ஆனா, கலைஞருக்கு இது ரெண்டுமே இருந்துச்சு. கலைஞர் குறித்து பேச ஆரம்பித்தால் எங்கு ஆரம்பிப்பது, எங்கு முடிப்பது என எனக்கு தெரியாது. அந்த அளவிற்கு கலைஞரால் ஈர்க்கப்பட்டவன் நான். மந்திரகுமாரி படத்தில் கிடைத்த வருமானத்தின் மூலம் தான் 1955 ஆம் ஆண்டு கோபாலபுரம் வீட்டை கலைஞர் வாங்கினார். அந்த வீட்டுல தான் கடைசி வரை இருந்தாரு. ரொம்ப எளிமையா வாழ்ந்தவர் கலைஞர்.  புட்டபர்த்தி சாய்பாபாவே கலைஞர் வீட்டுக்கு நேரில் சென்று பார்த்தார். அவரின் காலத்தில் வாழ்ந்தது மிகப்பெரிய விஷயம்.


கலைஞர் அரசியலுக்கு செல்லாமல் சினிமாவிலேயே இருந்திருந்தால் எத்தனையோ சிவாஜி, எம்ஜிஆரை உருவாக்கி இருப்பார். எழுத்து சக்தி என்பது கலைஞரிடத்தில் இருந்தது. அவர் எழுதிய கடிதங்களை கொஞ்சம் படித்துள்ளேன். சில கடிதம் படிக்கும்போது கண்ணீர் வரும். சில கடிதங்கள் படிக்கும்போது கண்ணுல நெருப்பு பறக்கும்” என புகழ்ந்து பேசினார். ரஜினியின் இந்த பேச்சுக்கு அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர். 




மேலும் படிக்க: Kalaingar 100: ”நீ வேணும்னா மாத்திக்காட்டு; ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் செய்த சம்பவம்” - சூர்யா சொன்ன சுவாரஸ்யம்!