ஜோதிடம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தமிழ் சினிமாவில் தனது 48வது ஆண்டில் வெற்றிகரமான முன்னணி நடிகராக இன்றளவும் தனது 70 வயதிலும் ரஜினிகாந்த் வலம் வருகிறார். ரசிகர்கள் அவரை சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கிறார்கள். இதுவரை 168 படங்களில் நடித்து முடித்துள்ள ரஜினி, 169வது படமாக ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 


இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. 


இதில் பேசிய ரஜினியின் காகம் - கழுகு குட்டிக்கதை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இணையத்திலும் காரசார விவாதம் நடைபெற்றது. இப்படியான நிலையில் ரஜினி ரசிகர்கள் அவரின் பழைய வீடியோக்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஜோதிடம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. 


மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த நடிகர் விவேக், ரஜினிகாந்திடம் தொடர்ந்து பல கேள்விகளை எழுப்புவார். அப்போது, “கட்டம் சரியில்லை என கம்முன்னு இருக்கணுமா? இல்ல முயற்சிதான் முக்கியம் என்று உழைத்துக் கொண்டே இருக்க வேண்டுமா?” எனக் கேட்டார். அதற்கு ரஜினி, கட்டம் என்றால் என்ன ஜோதிடத்தை கேட்கிறீர்களா? என கேட்பார். 


ஆம் என விவேக் சொன்னதும், ஜோசியம் என்றொரு சாஸ்திரம் புராண காலத்திலிருந்து இருக்கிறது. அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட சாஸ்திரம். ஆனால் அதை யார் சொல்கிறார்கள் என்பதை பொறுத்து இருக்கிறது. அதற்காக நாம் ஜோசியத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அல்ல. நமக்கு என்ன எழுதி இருக்கிறதோ அதுதான் நடக்கும். என்ன கிடைக்குமோ அதுதான் கிடைக்கும். ஆண்டவன் நமக்கு கொடுத்த தொழிலை நாம் நியாயமாக நேர்மையாக செய்து கொண்டிருந்தால் எல்லாமே சரியாக இருக்கும்” என தெரிவிக்கிறார்.